டோக்லாம்

ல்லைப்பகுதிகளில் உள்ள சீன வீரர்களுக்கு தமிழ் மற்றும் மலையாள மொழி சீன அரசால் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு சீன மொழி தெரிந்தவர்கள் மட்டுமே இனி திபேத்திய எல்லைக் காவல்படையில் சேர்க்கப்படுவார்கள் என இந்திய அரசால் அறிவிக்கப் பட்டிருந்தது.   அது மட்டுமின்றி தற்போது பணியில் உள்ளவர்களுக்கும் சீன மொழியையும், அது திபெத் பகுதியில் பேசப்படும் போது ஒலி மாறுவதைப் பற்றியும் பயிற்சி வகுப்புக்களும் நடத்தி வரப் படுகிறது.   இதற்கு சீன வீரர்களுடன் எல்லையில் பேச்சு வார்த்தை நடத்த மொழிப் பிரச்னை ஒரு தடையாகக் கூடாது என்பதே காரணம் என அறிவிக்கப்பட்டது.

தற்போது சீன அரசு தனது எல்லை வீரர்களுக்கு தமிழ் மற்றும் மலையாள மொழியைக் கற்றுக் கொடுத்து வருகிறது.  அந்தப் பகுதியில் உள்ள இந்திய வீரர்கள் பலரும் தென் இந்தியாவை சேர்ந்தவர்கள்.  அவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி சரளமாக பேசத் தெரியும்.  தற்போது சீன மொழியையும் கற்று வருகிறார்கள்  இருப்பினும் சீன வீரர்களுக்கு தமிழ் மற்றும் மலையாளம் பேசக் கற்றுத் தரப்படுகிறது.  இந்திய வீரர்களுடன் உரையாட இதுவே வசதி என சொல்லப்படுகிறது.

பெயர் தெரிவிக்க விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர், ”முன்பு இந்திய – பாகிஸ்தான் போரின் போது தமிழ், மற்றும் மலையாளத்தில் ரேடியோ செய்திகள் வீரர்களுக்கு அளிக்கப்பட்டன. பாகிஸ்தான் வீரர்களைப் பொறுத்த வரை இந்த இரு மொழிகளையும் சிறிது கூட புரிந்துக் கொள்ள முடியாது என்பதால் அவர்கள் ஒட்டுக் கேட்ட போதும் ஒரு பயனுமின்றி போனது.  இதை அறிந்துக் கொண்ட சீன அரசு செய்திகளை புரிந்துக் கொள்ளத்தான் இந்த மொழிகளை வீரர்களுக்கு கற்றுத் தருகிறது” என தெரிவித்து உள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளம் கற்கும் சீன வீரர்கள் எழுத்து வடிவத்தில் தென் இந்திய மொழிகளைக் கற்பது மிகவும் எளிதாக உள்ளதாகவும் ஆனால் உச்சரிப்பு மிகவும் கடினமாக உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.