தாவூத் இப்ராஹிம்
தாவூத் இப்ராஹிம்

கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு, போதைப்பொருள் கடத்தல், ஆயுத விற்பனை இதை உள்ளூரில் அல்ல, உலகம் முழுவதும் கிளை பரப்பி நிழல் உலகில் ராஜபோக வாழ்க்கை நடத்தி வரும் தாதா தாவூத் இப்ராஹிம். இவனுடைய நிழல் உலக தாதா ஸ்டைல் வாழ்க்கையில் ஈர்க்கப்பட்டு அந்தக் கும்பலில் சேர்வதற்காக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 5 டீன் ஏஜ் இளைஞர்கள் மும்பை நோக்கி பயணம் செய்துள்ளனர். அவர்களின்” கனவுப்பயணத்தை’ போபால் ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்திய போலீசார் கடும் எச்சரிக்கையுடன் அவர்களின் சொந்த வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பற்றிக் கூறப்படுவதாவது:-
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு போபால் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி 5 டீன் ஏஜ் இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர்.
சிறுவர்கள் கடத்தல் மற்றும்  அவர்களை போதைப்பொருள் கடத்துவதற்குப் பயன்படுத்துவது போன்ற சட்டவிரோதச் செயல்களை தடுப்பதற்காக போபால் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், வியாபாரிகள் ஆகியோரைக் கொண்ட ரகசிய குழுவினை ‘ஆரம்பா’ என்ற தொண்டு நிறுவனம் அமைத்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகச் செயல்படும் இக்குழுவினர் இதுவரை 17 சிறுவர்களை மீட்டூள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த மீட்புக்குழுவினர், 5 பேர் மீதும் சந்தேகம் கொண்டு விசாரிக்கத் தொடங்கி உள்ளனர்.அப்போது அவர்கள் 5 பேரும் தாங்கள் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும்.ஆடம்பரமாய் வாழவேண்டும்.பெரிய தாதாவாக உருவெடுக்க வேண்டும். அதற்காக தங்கள் படிப்பை விட்டுவிட்டு தாவூத் இப்ராஹிம் கும்பலில் சேர்வதற்காக மும்பை நோக்கிச் செல்வதாக தெரிவித்துள்ளனர்.
அதைக் கேட்ட மீட்புக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். யாரோ தவறாக அவர்களை வழி நடத்தி உள்ளனர் என்பதை புரிந்து கொண்ட அவர்கள் இதுதொடர்பாக உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் அவர்களுக்கு தக்க அறிவுரையும், எச்சரிக்கையும் கொடுத்து அவர்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
போபால் ரயில்நிலையத்தில் செயல்பட்டு வரும் மீட்புக் குழுவில் சுமை தூக்கிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், அங்கு கடை வைத்திருப்பவர்கள் என 34 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். சந்தேகப்ப்டும்படி சிறுவர் சிறுமியர் அங்கு காணப்பட்டால் உடனடியாக அவர்களை விசாரித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்து விடுகின்றனர். அவர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்ப்ட்டுள்ளன. எனவே அவர்கள் குழந்தைகளிடம் விசாரிப்பதுபற்றி யாருக்கும் எவ்விதச் சந்தேகமும் ஏற்படுவதில்லை.