karunanithi ghulam nabi
திமுக கூட்டணியில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட 63 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டது. ஆனால் திமுகவோ 25 முதல் 30 தொகுதிகள் வரைதான் தர முடியும் என திட்டவட்டமாக கூறியது. இதை காங்கிரஸ் ஏற்க மறுத்து வந்தது. இதையடுத்து மார்ச் 25-ஆம் தேதி தொகுதி பங்கீடு தொடர்பாக கருணாநிதியை, குலாம்நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பில் உடன்பாடு ஏற்படாததால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஆகியோரைச் சந்தித்து ஆலோசித்து வருவதாக குலாம் நபி ஆசாத் சென்றார். இதனிடையே குலாம் நபி ஆசாத்துடன் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.பி கனிமொழி மூலமாக சென்னையில் இருந்தவாறே பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இதில், இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு எட்டியுள்ளது. இந்த நிலையில் குலாநம்பி ஆசாத் நேற்று இரவு சென்னை வருகை தந்தார்.
பின்னர் இன்று காலை 9 மணியளவில் அவர் கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்தார். இச்சந்திப்பின் போது திமுக பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன், மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்நிலையில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்தது. இதனை காங்கிரஸ் கட்சியும் ஏற்று தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கையெழுத்திட்டார். பின்னர் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.