நியூயார்க்:
ஒருவரையொருவர் நேரில் பார்க்காமலேயே காதலித்து, பின்னர் திருமணம் செய்து கொள்வது சினிமாக்களில் மட்டுமே இருந்து வந்த விஷயம். நம்ம ஊர் காதல் கோட்டை படத்தை கூட இதற்கு உதாரணமாக கூறலாம். இது கடிதம் இருந்த காலம். இப்போது சமூக வளைதளங்களில் இத்தகைய காதல் மலர்ந்து திருமணத்தில் முடிவது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வருகிறது. இதில் ஏமாறுவோர் தான் அதிகம் என்பது வேறு கதை.
அமெரிக்காவில் இப்படி ஒரு ஜோடி இன்ஸ்டாகிராம் (பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளம்) தொடர்பு மூலம் பழகி, காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ஒரு வருடத்திற்கு முன்பு கலிபோர்னியாவை சேர்ந்த எரிக்கா ஹரிஸ் என்பவருக்கும், நியூயார்கை சேர்ந்த ஆர்டி வான் என்ற பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. வீடியோ, கவிதை ஆகியவற்றை இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஒரு முறை எரிக்கா ஹாரிஸின் ப்ரொபைல் போட்டோவை பார்த்த ஆர்டி வான், அதற்கு காதல் ரசம் சொட்ட சொட்ட கமென்ட் போட்டார். அவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார். இப்படியாக இருவருக்கும் இடையிலான நட்பு வளர்ந்தது. இதன் பின்னர் இருவரும் நீண்ட நேரம் போனில் பேசி வந்துள்ளனர்.
சில மாதங்கள் நீடித்த நட்பு இடையில், இன்ஸ்டாகிராம் தொடர்பில் இருந்து தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. பின்னர் ஒரு முறை வான் கார் விபத்தில் சிக்கிய போது இருவரது நட்பும் மீண்டும் துளிர்விட்டது. இன்ஸ்டாகிராமில் கமென்ட் போட்ட ஒரு நபர் ‘ஏன் இருவரும் ஜோடி சேர கூடாது’ என்று கேள்வி கேட்டார்.
உடனடியாக வான் நியூயார்கில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஒரு வழி விமான டிக்கெட் மூலம் கலிபோர்னியா சென்றார். அங்கு இருவரும் ஒருவரையொருவர் முதன் முறையாக நேரில் சந்தித்தனர்.
வான் திருமணத்துக்கு ஒப்புதல் தெரிவிக்க, அடுத்த ஒரு சில விநாடிகளிலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இன்ஸ்டாகிராமில் இவர்களது ஸ்டேட்டஸ் திருமணம் முடிந்து விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானின் தாய் அறிந்து கொள்வதற்காக உள்ளூர் செய்தி நிறுவனத்தை வரவழைத்து தங்களது கதையை கூறியுள்ளனர்.