seeman300-2
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று, வேட்பாளரை அறிமுகம் செய்துவைத்து பேசினார்.
அப்போது அவர், ‘’விஜயகாந்த் முதலமைச்சர் ஆவதற்கு என்ன தகுதி இருக்கிறது?. மக்கள் நலக்கூட்டணியில் உள்ள திருமாவளவனின் போராட்டம் மற்றும் தியாகத்திற்கு ஒரு துளி கூட விஜயகாந்த் ஈடாக மாட்டார். விஜயகாந்த் 6 மாதத்திற்கு முன்பே மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி சேர்ந்து இருக்க வேண்டியது தானே? ஏன் இப்போது சேர்ந்து இருக்கிறார்?.
தமிழ்நாட்டை தமிழன் ஆள முடியவில்லை, தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் திராவிடர்கள் தான் ஆளுகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சி, ஆட்சிக்கு வந்தவுடன் ஜல்லிக்கட்டு தேசிய விளையாட்டாக அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் தரமான கல்வி, குடிநீர், சாலைவசதி, தடையற்ற மின்சாரம், சமமான மருத்துவம் வழங்கப்படும். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் 50 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்து உள்ளனர். மீண்டும் அவர்களுக்கு நீங்கள் வாய்ப்பு அளித்தால் 50 ஆண்டுகளில் செய்யாததை 5 ஆண்டுகளில் செய்து விடுவார்களா? மக்கள் சிந்திக்க வேண்டும்.
யாரையும் நம்பி பயன் இல்லாததால் நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் களத்தில் இறங்கி உள்ளது. பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.