டில்லி:

ஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திருவாரூரில் தேர்தல் நடத்தலாமா? என்பது குறித்து அறிக்கை அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டு உள்ளது.

இதன் காரணமாக திருவாரூர் இடைத்தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு ஏற்படும் என நம்பப்படுகிறது.

கருணாநிதி மறைவை தொடர்ந்து காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவாரூர் தொகுதி ஏற்கனவே கஜா புயலினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதி மன்றத்தில் கம்யூனிஸ்டு எம்.பி. டி.ராஜா, மாரிமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுமீதான விசாரணை ஓரிரு நாளில் நடைபெற உள்ளது.

இதற்கிடையில், திருவாரூர்  இடைத்தேர்தல் தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து பேசினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜா, திருவாரூரில் கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகள் நிலை பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுக்க வேண்டும் என  வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம், திருவாரூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது. மேலும், திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா அல்லது முடியாதா என்பது குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க தமிழக தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்டு உள்ளது.

அதன் காரணமாக தமிழக  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ  திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது? என மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.