சென்னை:

மிழ்த் திரைப்படத் தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு கட்ட இன்று அடிக்கல் நாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விளாத்திகுளத்தில் இசைமேதை நல்லப்பசுவாமி நினைவு தூணையும் காணொளி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமியின் நினைவுத் தூணினை திறந்து வைத்தார்.

மேலும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மூலமாக செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 1000 குடியிருப்புகள் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  வீரபாண்டிய கட்டபொம்மன் மரபில் வந்தவரும், ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் இசைஞான குருவாக விளங்கியவரும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது மகாகவி பாரதியாரைப் போல் ஆங்கில அரசால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டவரும், கரகரப்பிரியா ராகத்தின் சக்கரவர்த்தி என்று போற்றப்பட்டவரும், மகாகவி பாரதியார் கவிதைகள் எழுத ராகங்களை எடுத்துக் கொடுத்தவரும், பல்வேறு பட்டங்களும், பரிசுகளும் பெற்றவரும், வாழ்நாள் முழுவதும் இசைக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவருமான இசைமேதை நல்லப்பசுவாமியின் நினைவைப் போற்றும் வகையில், 2018–2019ம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையின் போது, இசை அறிஞர்களாலும், வித்வான்களாலும், இசை மகா சமுத்திரம் என்றும், மாமேதை என்றும் போற்றிப் புகழப்பட்ட இசைமேதை நல்லப்பசுவாமிக்கு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் நினைவுத் தூண் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமியின் நினைவுத் தூணினை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

1000 குடியிருப்பு கட்ட  அடிக்கல்

தமிழ்நாடு அரசின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன உறுப்பினர்களின் நலனிற்காக 50 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அவ்விடத்தில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மூலம் திரைப்படத் தொழிலாளர்களுக்கு 6,000 குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக 1,000 குடியிருப்புகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.

மேலும், 26.8.2018 அன்று பையனூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் திறப்பு விழாவில், அம்மாவின் பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி, முதற்கட்டமாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் 16.9.2019 அன்று தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, தற்போது இரண்டாம் கட்டமாக, அம்மாவின் பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் இன்று தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் க. சண்முகம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் பொ. சங்கர், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் அங்கமுத்து சண்முகம் மற்றும் பொருளாளர் சாமிநாதன், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.