download
மிழ் சினிமாவின் முதல் சோம்பி படம் என்ற அறிவிப்புடன் வந்திருக்கிறது மிருதன் திரைப்படம்.
அதுசரி, சோம்பி என்றால் என்ன?
ஏதோ ஒரு குறிப்பிட்ட வைரஸ், மனிதனின் உடலில் புகுந்துவிட்டால் அவனுக்கு மிருக குணம் வந்துவிடும். எல்லோரையும் கடித்து குதறி கொன்றுவிடுவான். அதுதான் சோம்பி.
இதே கான்செப்டில் சையிப் அலிகான் நடித்த இந்தி, “கோ கோவா கான்” என்ற இந்திப்படம் வெளியானது. தமிழுக்கு  “மிருதன்” தான் ஃபர்ஸ்ட்.
கதைக்கு வருவோம்..
குளு குளு ஊட்டியில் டிராபிக் எஸ்.ஐ. ஆக இருக்கிறார் ஜெயம்ரவி. அவருக்கு ஒரே ஒரு அன்புத்தங்கை, அனிகா.  யெஸ். தங்கை, பேஸ்புக் அக்கவுண்ட் ஓப்பன் பண்ண வேண்டும் என்று சொன்னால், ட்விட்டர் அக்கவுண்ட்டையும் சேர்த்து ஓப்பன் பண்ணிக்கொடுக்கும் பாசக்கார அண்ணன் ஜெயம் ரவி.
இடையில் “ஆக்ஸிடண்ட்” (!) ஆக, லட்சுமிமேனனை சந்திக்கிறார். அடுத்த யெஸ்… காதலிக்கிறார்கள்.
இதற்கிடையே ஏதோ  கெமிக்கலை ஏற்றிச் செல்லும் ஒரு லாரியிலிருந்து கெமிக்கல் வெளியே கொட்டிவிடுகிறது. இதை ஒரு நாய்  குடித்துவிடுகிறது.  அந்த  நாய்க்கு வெறி பிடித்து ஒரு மனிதரை கடித்து விடுகிறது.
கடிப்பட்ட மனிதனின் உடலுக்குள் பரவிய அந்த வைரஸ், அவருக்குள் மிருக குணத்தை ஏற்படுத்த.. அவர் மற்றவர்களை கடிக்க ஆரம்பிக்கிறார். ஊர் முழுதும் வைரஸ் பரவி திமிகோலப்படுகிறது.
நிலைமை  மோசமாக, அந்த ஊருக்குள் யாரும் நுழையக்கூடாது   ஊரை விட்டு யாரும் வெளியே செல்லக்கூடாது என்று உத்தரவிடுகிறது போலீஸ்.  தவிர  இந்த வைரஸால் தாக்கப்பட்டவர்களை சுட்டுத் தள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண லட்சுமி மேனன் அடங்கிய ஒரு மருத்துவக்குழு ஜெயம் ரவியின் உதவியுடன்,  வைரஸை அழிக்கும் மருந்தை கண்டுபிடிக்க  முயல்கிறார்கள்.  . ஆனால், இவர்களை வைரஸ் தாக்கப்பட்ட மனிதர்கள்  தடுக்கிறார்கள்.
வைரஸ் தாக்கப்பட்டவர்களிடம் இருந்து ஜெயம் ரவி, லட்சுமி மேனன் அன் கோ தப்பித்தார்களா வைரஸை அழிக்க மருத்து கண்டுபிடித்தார்களா  என்பதே மீதிக்கதை.
வழக்கம்போல நடிப்பில் ஜொலிக்கிறார் ஜெயம் ரவி. சாதுவான போலீஸ் இன்ஸ்பெக்டராக அறிமுகமாகும் அவர், எம்.எல்.ஏவிடம் காட்டும் விரைப்பு அருமை. , தங்கையிடம் பாசத்தை பொழியும் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் லட்சுமி மேனனும் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்.  தங்கையாக வரும் அனிகாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சில காட்சிகள் பதை பதைக்க வைக்கின்றன. (ஆனாலும் ஓவர்) அதற்கு வெங்கடேஷின் ஒளிப்பதிவு பக்கபலமாக இருக்கிறது. டி. இமானின் இசையும் மிரட்டுகிறது. அதே நேரம் ஒரே மெட்டை மறுபடி மறுபடி  போட்டு தாளிக்கிறார் மனிதர்.
நல்ல மணிகள் இருந்தாலும் கோர்ப்பதற்கு திரைக்கதை என்ற நல்ல நூல் இல்லை என்பது  இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜனின் பலவீனம்.
தவிர லாஜிக் என்பதே இல்லை.
சோம்பிகளை சுட ஜெயம்ரவி துப்பாக்கியை எடுப்பது, கண்ட மேனிக்கு சுடுவது எல்லாம் சரிதான். துப்பாக்கியில் எத்தனை புல்லட்கள் இருக்கும்? விட்டால் திரையைக் கிழித்துக்கொண்டு வந்து நம்மையும் போட்டுத்தள்ளிவிடுவார் போலிருக்கிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அதே போல மிரட்டுகிறேன் பேர்வழி என்று அதீதமாய் எரிச்சலூட்டும் காட்சிகள் நிறைய.
மொத்தத்தில் மிருதன்.. ரசிகர்களுக்கு மிருகவதை!