asdf1
சென்னை,
தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும், கருணாநிதி தங்களை கைவிடமாட்டார் என்றும் மக்கள் தே.மு.தி.க. கட்சி ஒருங்கிணைப்பாளர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்தார்.
கருணாநிதியுடன் சந்திப்பு
தே.மு.தி.க.வில் போர்கொடி தூக்கிய அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகளை விஜயகாந்த் நீக்கினார். இதைத்தொடர்ந்து வி.சி.சந்திரகுமார் தலைமையில் மக்கள் தே.மு.தி.க. என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் ஒருங்கிணைப்பாளராக வி.சி.சந்திரகுமார் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை வி.சி.சந்திரகுமார் தலைமையிலான மக்கள் தே.மு.தி.க.வினர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது அந்த அமைப்பின் நிர்வாகிகள் எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த வி.சி.சந்திரகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் தே.மு.தி.க.வில் இருந்து வெளியேறி மக்கள் தே.மு.தி.க.வை உருவாக்கியிருக்கிறோம். தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை கொடுத்தோம்.
கைவிடமாட்டேன்
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவரிடம் தெரிவித்தோம். இதற்கு கருணாநிதி எங்களிடம் நீங்கள் கடைசி நேரத்தில் வந்து இருக்கிறீர்கள். இருந்தாலும் என்னை நம்பி வந்து இருக்கிறீர்கள். நம்பியவர்களை நான் கைவிடமாட்டேன். ஏதாவது வகையில் உங்களுக்கு நான் உதவுவேன் என்று தெரிவித்தார். நாங்களும் அவரை நம்பி வந்து இருக்கிறோம். அவர் எங்களை கைவிடமாட்டார். எண்ணிக்கையை குறிப்பிட்டு நாங்கள் இடங்களை கேட்கவில்லை. போட்டியிட வாய்ப்பு தாருங்கள் என்று தான் கூறியிருக்கிறோம். அதற்கு நாளை (இன்று) பேசிக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜயகாந்தை எதிர்த்து போட்டியா?
அவரிடம் விஜயகாந்தை எதிர்த்து தி.மு.க. போட்டியிட சொன்னால் நீங்கள் போட்டியிடுவீர்களா? என்று நிருபர் கள் கேட்டனர். அதற்கு அவர், ‘விஜயகாந்தை எதிர்த்து போட்டியிட தி.மு.க.வில் பலர் இருக்கிறார்கள், நாங்கள் சாதாரணமானவர்கள்’ என்றார்.
மக்கள் தே.மு.தி.க.வுக்கு தி.மு.க. தரப்பில் 3 இடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான பேச்சுவார்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.