0
பா.ஜ.கவுடன் வெளிப்படையாகவும், தி.மு.க.வுடன் மறைமுகமாகவும் கூட்டணி பேச்சுவார்த்தை(!) நடத்தி வந்த தே.மு.தி.க., முடிவாக ம.ந.கூவுடன் அணி சேர்ந்துவிட்டது.
பா.ஜ.கவைப் பொறுத்தவரை, இழப்பதற்கு ஏதுமில்லை என்கிற நிலைதான். ஆகவே தைரியமாக(!) “தனித்து போட்டி” என்கிற அளவில் பேச ஆரம்பித்துவிட்டார்கள் அந்தக் கட்சி தலைவர்கள்.
தி.மு.க.வின்பாடுதான் திண்டாட்டமாகிவிட்டது.  கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, அதுவும் மூன்றாவது இடம். அதே போல பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறமுடியாமல் பெரும் தோல்வி.  இந்த நிலையில் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலிலிலும் தோல்வி எனறால் அதன் பிறகு தி.மு.க.வின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.
அதனால்தான் எப்படியாவது எந்த கட்சியுடனானவது கூட்டணி வைத்து வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று துடிக்கிறது தி.மு.க. தலைமை.
இப்போது  தி.மு..கவி்ன் பார்வை, பா.ம.க. மீது படிந்துள்ளது.  கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட  பா.ம.க.,  மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தி.மு.க., 23 இடங்களைப் பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
எதிர் முகாமில் அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது.
ஆகவே, தோல்வி கூட்டணியில் ஏன் இருக்க வேண்டும் என்று நினைத்து தி.மு.கவைவிட்டு விலகியது பா.ம.க.  சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து நீடிக்க விரும்பாத, பா.ம.க.,. அடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தலில், தனித்தே போட்டியிட்டது. அதில் பெரும் தோல்வியை சந்தித்தது.
பிறகு கடந்த பாராளுமன்ற தேர்தலில்  பா.ஜ., கூட்டணியில் இடம் பிடித்தது. எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க.,  ஏழில் தோல்வியை தழுவியது.  அன்புமணி மட்டும் தர்மபுரியில் வென்றார்.
தற்போதைய சட்டமன்ற தேர்தல் நெருங்கிய வேளையில், பா.ம.கவுக்கு அழைப்பு விட்டது பா.ஜ.க.  ஆனால், அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த பா.ம.க., இதை ஏற்றுக்கொண்டால்தான் பா.ஜ.கவுடன் கூட்டணி என்றது. ஆகவே பா.ஜ.க. மவுனமானது.
இதையடுத்து தனித்து போட்டியிடுவது என்று  (கடந்த பலமுறை போல் அல்லாமல்) உறுதியாக களமிறங்கியது பா.ம.க.
தி.மு.கவிலேயே கருணாநிதி, ஸ்டாலின் என இரு முதல்வர் வேட்பாளர்கள் இருப்பதால் பா.ம.க. பக்கம் கவனம் செலுத்தாமல் இருந்தது தி.மு.க.  ஆனால், தே.மு.தி.க. இழுத்தடித்து, கழற்விட்ட நிலையில் தற்போது பா.ம.க.வை நோக்கி தனது கவனத்தை திருப்பியிருக்கிறது தி.மு.க.
வட மாவட்டங்களில் ஓரளவு வாக்குகளை வைத்துள்ள பா.ம.க.வை இணைத்துக்கொண்டால்தான், அ.தி.மு.க.வை வெற்றிகொள்ள முடியும் என தி.மு.க. தலைமை கருதுகிறது.
பா.ம.க. கட்சியைச் சேரந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தியுடன், தி.மு.கச் சேர்ந்த முன்னாள் மாநில அமைச்சர் துரைமுருகன் கூட்டணி குறித்து பேசியதாக செய்திகள் பரவியுள்ளன.
இன்னொரு புறம் தி.மு.கவைச் சேரந்த ஜகத்ரட்சகன், காடுவெட்டிகுரு மூலமாக ராமதாஸை அணுக முயற்சிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இன்றைய சூழ்நிலையில், தி.மு.கவுடன் கூட்டணி வைப்பதே பா.மகவுக்கு நல்லது என்கிற குரலும் அக் கட்சி இரண்டாம் கட்ட தலைவர்களிடம் எழுந்துள்ளது.  தி.மு.க. – காங்கிரஸ் – பா.ம.க. மற்றும் சிறு கட்சிகள் என்று ஒரு கூட்டணி ஏற்பட்டால் அதில் பா.மக. கணிசமான வெற்றிகளை ஈட்ட முடியும் என்பது  இந்த இரண்டாம் கட்ட தலைவர்களின் கணிப்பு.
மேலும் பா.ம.க.  என்பது வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மட்டுமே குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை வைத்திருக்கிறது. தவிர சமீப காலத்தில் தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறது.
ஆகவே திமுக – காங்கிரஸ் கூட்டணியே நல்லது என்று பா.ம.கவில் ஒரு எண்ணம் பரவி வருகிறது. அதற்கேற்ப, தி.மு.கவுடனான பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
“துணை முதல்வர் பதவி, கூட்டணி ஆட்சி என்றெல்லாம் பா.ம.க. சார்பில் நிபந்தனை போடப்படுகின்றன. தி.மு.க. தரப்பில் அதற்கு மசிவதாய் இல்லை. ஆனாலும்  இரு கட்சிகளுக்கும் பேச்சுவார்த்தை தொடரத்தான் செய்கிறது” என்கிறார்கள்.
விரைவில் ராமதாஸ் – கருணாநிதி சந்திப்பு நிகழலாம், கூட்டணியும் அறிவிக்கப்படலாம் என்பதுதான் தற்போதையே அரசியல் பரபரப்பு.
“அன்புமணியை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து, தனித்து போட்டி என்று களம் இறங்கிவிட்டதே பா.ம.க.! இனி எப்படி கூட்டணி சாத்தியம்” என்ற கேள்வி உங்களுக்கு எழுந்ததால்… நீங்கள் அரசியலுக்கு புதுசு என்று அர்த்தம்!