தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது காவல்துறை நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியான  நிலையில், மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்படக்கூடாது என்றும்  ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் கோரி அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக போராடி வருகிறார்கள். இந்த நிலையில் 100 நாள் போராட்டத்தை அறிவித்தனர். நூறாவது நாளான நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் சென்றனர். அப்போது கலவரம் மூண்டது. காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பத்து பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த கந்தையா, ஷண்முகம், மனிராஜ், ஸ்நோலின், வினிதா தாளமுத்து நகரைச் சேர்ந்த கிளாஸ்டன், ஆண்டனி  . தூத்துக்குடி சிப்காட் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார், ஒட்டாபிடாரத்தை சேர்ந்த தமிழரசன், கார்த்திக் ஆகியோர்  துப்பாக்கிச்சூட்டில் பலியாகினர்.

இந்நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி, திருச்செந்தூர் வட்டத்தை சேர்ந்த வேம்பார், குளத்தூர், ஆறுமுகமங்கலம், வேடநத்தம், ஒட்டப்பிடாரம், எப்போதும் வென்றான், தூத்துக்குடி தெற்கு, சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடந்த, மிதிவண்டி, இரு சக்கரவாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன பேரணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கத்தி,கம்பு, கற்கள், அரசியல் ,சாதி கொடிக் கம்புகள், அபாயகரமான ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.