ற்ற மாநிலங்களை போலவே ஆந்திராவிலும் அரசியல் கட்சிகளிடையே உறுதியான தேர்தல் கூட்டணி உருவாகவில்லை.எனினும் அந்த மாநில காங்கிரஸ் கட்சி,தனது நிலைப்பாட்டை  தெளிவு படுத்தி விட்டது.

‘’ஆந்திராவில் தெலுங்கு தேசத்துடன் உடன்பாடு கிடையாது’’ என்று உறுதி பட தெரிவித்து தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டது காங்கிரஸ்.

அண்மையில் தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் –காங்கிரசுக்கு கிடைத்த பாடமே இந்த முடிவுக்கு காரணம்.

அரசியலில் மூன்றும் ,மூன்றும் ஆறு ஆகாது என்பதை தெலுங்கானா தேர்தல் முடிவு அழுத்தமாக சுட்டி காட்டி விட்டது.

அந்த மாநில சட்டப்பேரவை  தேர்தலை தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட்  போன்ற கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ்  எதிர்கொண்டது.

ஆனால் படுதோல்வியை சந்தித்தது.

காரணம்-

பொருந்தா கூட்டணி.

காங்கிரசுக்கு எதிராக  என்.டி.ஆரால் உருவாக்கப்பட்டதே தெலுங்கு தேசம்.மாநிலத்தில் மட்டுமல்லாது, தேசிய அளவிலும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்தவர்- என்.டி.ஆர்.

தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க.போன்றது  ஒருங்கிணைந்த ஆந்திராவில் காங்கிரஸ்-தெலுங்கு தேசம்.

ஸ்டாலினுடன்  எடப்பாடி பழனிச்சாமி உடன்பாடு வைத்தால் எம்.ஜி.ஆர்.தொண்டர்கள் ஏற்பார்களா?அது போல் எடப்பாடியுடனான உடன்பாட்டை கலைஞர் ஆதரவாளர்கள் ஒப்புக்கொள்வார்களா?

எனவே தான் -தெலுங்கானாவில் அது போன்ற விநோத –விசித்திர  கூட்டணி தோற்றது.அங்கே தனித்து நின்றிருந்தால் காங்கிரஸ் ஒருவேளை  வென்றிருக்கலாம்.  நிச்சயமாக இந்த அளவுக்கு மோசமான தோல்வியை சந்தித்திருக்காது.

எனவேதான்  ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தல்  மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தனித்து போட்டியிடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளது காங்கிரஸ்.

இந்த முடிவை தெலுங்கு தேசமும் வரவேற்று உள்ளது.

சொல்லப்போனால்-மேல்மட்ட அளவில் காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் தலைவர்களிடையே ஒப்புதல் பெற்றே  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பரஸ்பரம் போட்டி..மத்தியில் கூட்டணி என்பது இரு கட்சிகளின் நிலைப்பாடு.

இது விநோத ஏற்பாடாக இருக்கலாம். ஆனால்  ஆந்திர மாநிலத்தில் இரு  கட்சிகளும்   உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்றால் இதை தவிர  இரு கட்சிகளுக்கும் வேறு வழி இல்லை.

டெல்லியில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடும்  அரவிந்த் கெஜ்ரிவாலும், உ.பி.யில் ராகுலை முறைக்கும் அகிலேஷ் யாதவும் ,மே.வங்காளத்தில் தனித்து களம் காணும் மம்தாவும்-

கொல்கத்தாவில் ஒரே மேடையில் காங்கிரசின் மல்லிகார்ஜுன் கார்கேயுடன் போஸ் கொடுத்ததை  ஆந்திர கூட்டணியுடன் பொருத்தி பார்த்தால்  குழப்பம் வராது.

—பாப்பாங்குளம் பாரதி