ramadoss
தேர்தலில் வாக்களிக்க மென்பொருள் நிறுவனங்களுக்கு விடுமுறை தேவை என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வசதியாக அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும்படி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். ஆனால், இதை ஏற்க முடியாது என்றும், கட்டாய விடுமுறை அளிப்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மென்பொருள் நிறுவனங்கள் கோரியுள்ளன. இது ஏற்கத்தக்கது அல்ல.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பது தான் பொறுப்புள்ள குடிமக்களின் முதன்மைக் கடமை ஆகும். இந்த கடமையை நிறைவேற்ற வாக்காளர்களுக்கு அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆனால், மென்பொருள் நிறுவனங்களுக்கு விடுமுறையளிப்பது சாத்தியல்ல என்றும், 2014ஆம் ஆண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் போது கட்டாய விடுமுறை அளிப்பதிலிருந்து மராட்டியத்தில் உள்ள மென்பொருள் நிறுவனங்களுக்கு விலக்களிக்கப் பட்டது போல தமிழகத்திலும் விலக்களிக்கப்பட வேண்டும் என்று தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் சங்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக அச்சங்கம் சார்பில் முன்வைக்கப்படும் காரணம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணி தொடர்ச்சியானது; மென்பொருள் கட்டமைப்பின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து, ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளர்கள் தேவை என்பது தான்.
தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் சங்கத்தின் இந்த காரணத்தை முற்றிலுமாக புறக்கணித்து விட முடியாது. அதே நேரத்தில், இந்த ஒரு காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, தேர்தலின்போது மென்பொருள் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க இயலாது என்பதும் சரியல்ல. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மென்பொருள் எழுதுவதுதான் முதன்மைப் பணி ஆகும். மென்பொருள் நிறுவனங்களில் 50 முதல் 60% பணியாளர்கள் இப்பணியைத் தான் மேற்கொள்வார்கள். தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளின் ஆகியோரின் பணிகள் தான் தொடர்ச்சியாகத் தேவைப்படும். மென்பொருள் நிறுவனங்களில் இவர்களின் அளவு 30 முதல் 40% இருக்கும். இவர்களை மட்டும் ஷிஃப்ட் முறையில் பணி செய்ய பணித்து விட்டு, மென்பொருள் எழுதும் பணியில் உள்ளவர்களையும், மற்ற பிரிவுகளின் ஊழியர்களையும் விடுப்பில் அனுப்புவதால் மென்பொருள் நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்காது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடாது என்று கவலைப்படும் அதேநேரத்தில் நாட்டையும், தமிழகத்தையும் ஆள நல்ல தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் அக்கறை காட்ட வேண்டும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒவ்வொரு தேர்தலிலும் சுமார் 50% வாக்குகள் மட்டுமே பதிவாகின்றன. ஊரகப்பகுதிகளில் 70 முதல் 75% வாக்குகள் தான் பதிவாகின்றன.சராசரியாகப் பார்த்தால் ஒவ்வொரு தேர்தலிலும் 25 முதல் 30% வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்துவதில்லை. இந்த வாக்குகள் தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றியமைக்க கூடியவை ஆகும். இவர்கள் வாக்குரிமையை செலுத்தாததால் பல நேரங்களில் தவறானவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அதனால் தமிழகத்திற்கு பல சீரழிவுகளும், பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
2016ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் வித்தியாசமான, முக்கியமானத் தேர்தல் ஆகும். 50 ஆண்டுகளாக தமிழகத்தை சீரழித்து வரும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கான தேர்தல் இதுவாகும். இளைஞர்கள், படித்தவர்கள், சமூக அக்கறையுள்ளவர்களின் விருப்பமும் இது தான். இந்த விருப்பம் நிறைவேற அனைத்துத் தரப்பினரும் தங்களின் வாக்குகளை செலுத்த வேண்டும். மென்பொருள் நிறுவனங்களுக்கு விடுமுறை சாத்தியமல்ல என்று கூறி மக்கள் தங்களின் கடமையை நிறைவேற்ற முட்டுக்கட்டைப் போடக்கூடாது. மென்பொருள் நிறுவனங்கள் உட்பட தொடர்ச்சியாக செயல்பட வேண்டிய அனைத்து நிறுவனங்களிலும் அத்தியாவசியப் பணியாளர் தவிர மற்ற அனைவருக்கும் தேர்தல் நாளில் வாக்களிப்பதற்கு வசதியாக ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதை தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும்’’என்று கூறியுள்ளார்.