1
‘கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி’
சிவாஜி கணேசன், நாகேஷ், ஏ. பி. நாகராஜன் உதவியால், இந்தப் பாடல் இன்றைக்கு எல்லாருக்கும் தெரியும். தருமியின் பல வசனங்கள் இப்போதும் மேடைகளில், இணையத்தில், மீம்களில் பேசப்படுகின்றன.
அதே பாடலில்தான், ‘தேர்தல்’ என்ற அழகிய சொல்லின் வேர் உள்ளது.
‘வேர்ச்சொல்’ என்ற பதமே அழகானதுதான். ஒரு சொல்லை மரமாகப்பார்க்காமல், அதன் வேர் என்ன என்று (பிடுங்காமல்) பார்த்து மகிழ்வது. அந்தவிதத்தில், ‘தேர்தல்’ என்ற சொல்லின் வேர், ‘தேர்’.
திருவிழாத் தேர் அல்ல, அது பெயர்ச்சொல், இந்தத் ‘தேர்’ வினைச்சொல், இதன் பொருள், பலவற்றைப் பார்த்து, அவற்றில் ஒன்றைமட்டும் எடுப்பது.
ஆக, தேர்ந்தெடுப்பது, தேர்ந்து எடுப்பதுதான் தேர்தல். பல வேட்பாளர்களை ஆராய்ந்து, அவர்களில் யார் சிறந்தவர் என்று ஒருவரைமட்டும் தேர்ந்தெடுத்தல், பல கட்சிகளை ஆராய்ந்து, அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆட்சிபுரியச்செய்தல்.
‘கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி’ என்றால் என்ன பொருள்?
’கொங்கு’ என்றால் தேன், ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்றால், பூக்களில் உள்ள தேனைச் சுவைத்துப்பார்த்து அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை என்று பொருள். ஒரு தும்பியின் தினசரி வேலையை என்ன அழகாகச் சொல்லிவிடுகிறார் கவிஞர்!
’அம்சிறை’ என்றால், அழகிய சிறகுகள் என்று பொருள். மீதிப்பாடலுக்குத் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதால், இதோடு நிறுத்திக்கொள்வோம். ஆர்வமுள்ளவர்கள் தேடிப் படித்துக்கொள்ளலாம்!