என்.சொக்கன்
download (1)
‘கவிதாயினி’ என்ற சொல்லொன்று இலக்கிய வட்டாரங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ‘கவிஞர்’ என்பதன் பெண்பால் அது.
உண்மையில், ‘கவிஞர்’ என்றாலே கவிதை எழுதுகிறவர் என்றுதான் பொருள், அது பொதுவான சொல், ஆணையும் குறிக்கும், பெண்ணையும் குறிக்கும். ‘கவிஞன்’ என்று எழுதினால்தான் ஆண்.
அதேபோல், ‘மாணவர்’ என்றால், ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம், ஆணைமட்டும் குறிப்பிடவேண்டுமென்றால், ‘மாணவன்’ என்று எழுதவேண்டும், பெண்ணைமட்டும் குறிப்பிடவேண்டுமென்றால் ‘மாணவி’ என்று எழுதவேண்டும்.
அரசியல் கட்சிகளின் தலைவர், ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம், அதைப் பிரித்துக்காட்டவேண்டும் என்றால், தலைவன்/ தலைவி என்ற சொற்களைப் பயன்படுத்தலாம்.
கவிஞர், மாணவர், தலைவர் என்ற சொற்களின் நிறைவில் வரும் ‘அர்’ விகுதி, மரியாதையைக்குறிக்கிறது. இதேபோல் ஆசிரியர், வீரர், ஓவியர் என்று பல சொற்களைக் குறிப்பிடலாம்.
‘அர்’ விகுதிக்கு இன்னொரு முக்கியமான பயன்பாடும் உண்டு: பன்மை.
அதாவது, மாணவர் என்றால், ஒரே ஒரு மாணவனை அல்லது மாணவியை மரியாதையாகவும் குறிப்பிடலாம், அல்லது, பல மாணவர்களையும் குறிப்பிடலாம். உதாரணமாக:
மாணவர் ரமேஷுக்குப் பரிசு கிடைத்தது
மாணவர் ஒற்றுமை வெல்க
இங்கே முதல் வாக்கியத்தில் ‘மாணவர்’ என்பது ஒருமை, அடுத்த வாக்கியத்தில் பன்மை.
‘தலைவர்’ என்ற சொல், ‘தலைமை’ என்ற பண்பிலிருந்து வந்திருக்கிறது, பலரைத் தலைமைதாங்கி வழிநடத்திச்செல்பவர் என்று அதற்குப்பொருள்.
நம் உடலுக்குத் தலைதான் முதன்மை, அதுபோல, ஒரு கட்சிக்கு, அல்லது இயக்கத்துக்குத் தலைவர்தான் முதன்மை, அவரது வழிகாட்டுதலின்படி மற்ற உறுப்புகள், அதாவது, மற்ற கட்சி உறுப்பினர்கள் நடப்பார்கள்.
நவீன கார்ப்பரேட் அலுவலகங்களில் Hierarchical Structure என்று வரைந்துவைத்திருப்பார்கள், அதைப் பார்ப்பதற்கு ஒரு மனிதனின் குச்சிக்கோட்டுப்படம்போலவே இருக்கும், அதன் உச்சியில், தலை இருக்கவேண்டிய இடத்தில் தலைவர் பெயர் இருக்கும்.
‘தல’ என்று ஒரு நடிகரைச் செல்லமாக அழைக்கிறார்கள், ‘தலை’யின் சிதைந்த வடிவம் அது. ‘ஐ’ என்ற எழுத்து, பேச்சில் ‘அ’ என்று மாறுவது சகஜம், ‘ஐந்து’ என்பதை ‘அஞ்சு’ என அழைக்கிறோமல்லவா, அதுபோல!
 
(தொடரும்)