tharpan
ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும் ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். உத்தராயண கால ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும் தட்சணாயன கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால் ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்தராயண காலத்தின் துவக்கமான தை மாதம் மிகவும் புனிதமானது.
அந்த மாதத்தில் வரும் அமாவாசையில் கடற்கரை தலங்களுக்குச் சென்று முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வணங்குதல் மானிடராக பிறந்த ஒவ்வொருவரினது ஆன்மிகக் கடமையாகும். எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்னைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.
தை மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில்) அமையும் தினமே தை அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி பூமியை சந்திரன் வலம் சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும் நிரூபிக்கப் பெற்ற உண்மைகள். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் நமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் எல்லாம் தரவல்லவர்.
சூரியனைப் “பிதுர் காரகன்’’ என்றும் சந்திரனை “மாதுர் காரகன்’’ என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும், சந்திரனும் பிதா, மாதாவாக வழிபடும் தெய்வங்களாகக் கருதப்படுகிறார்கள். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்த வர்கள் அமாவாசை, பூரண தினங்களில் வழிபடுகின்றனர். அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும் பவுர்ணமி தினத்தில் அன்னையை இழந்தவர்களும் வழிபடுவது புராதன காலம் தொட்டு பின் பற்றிவரும் ஒரு வழக்கமாகும். அமாவாசை திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தை மாததிலும், ஆடி மாதத்தில் வரும் அமாவாசை திதிக்கு அதிக சிறப்பு உண்டு.
தை மாதம் முருகனையும், அம்பாளையும் பூஜித்துக் கொண்டாடும் மாதம் என்றாலும் தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். பித்ருக்களுக்கான கடனைச் சரியாக நிறைவேற்றுவதால் பல நன்மைகள் உண்டாகும். பித்ருக்களுக்கு திதி தருவது பிண்டம் இடுவது, வழிபாடு செய்வது ஆகிய கடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிறது சாஸ்திரம். இக்கடனை அடைத்துவிட்டால் பிள்ளைகளின் வாழ்க்கை கலங்காதிருக்கும். மென்மேலும் சிறக்கும். பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான் ராமபிரானிடம் கூறி இருக்கிறார். ராமசந்திர மூர்த்தி, தசரத சக்கரவர்த்திக்கும், ஜடாயுவுக்கும் எள்ளால் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார்.
அப்போது, சிவபெருமான் ராமரின் முன் தோன்றி, முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ததால் அனைத்துப் பாவங்களும் நீங்கி, எல்லா நன்மைகளும் தேடி வரும் என்றார் என்கிறது புராணச் செய்தி. தை அமாவாசையன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மன் அனுமதி தருவார். யம தூதர்கள் பித்ருக்களை சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு அழைத்து வருவார்கள். பித்ருக்களும் அவரவர் சந்ததியினர் இல்லத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்களாம். அதனால் தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம்.
இந்தத் தர்ப்பணமானது பித்ருக்களைக் குளிரச் செய்து குடும்பத்தில் துர் சம்பவங்கள் நடக்காமல் காக்கும். பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூடக் கருணை காட்ட முடியாது. உதவி செய்ய முடியாது என்கிறது கருட புராணம். தை அமாவாசை அன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் தர இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து திதி செய்வர். ராமேஸ்வரம், திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் இத்தர்ப்பணத்தை அளிக்க மக்கள் கூடுவர்
rajesh reddy

நன்றி : Rajesh Reddy