சென்னை:

நடிகர் சங்க தேர்தலை ஜுன் 23-ம் தேதியே நடத்தலாம் என்றும், வாக்குகளை எண்ணக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


2019-22-ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற இருந்தது.

இந்த தேர்தலில் தற்போது பதவியில் இருக்கும் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியில் குதித்தன.

இரு அணிகளும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையில், உறுப்பினர் பதவியில் இருந்து தங்களை முறைகேடாக நீக்கியதாக பாரதிபிரியன் உள்ளிட்ட 61 பேர் சங்கப் பதிவாளரிடம் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, தேர்தலை ரத்து செய்து சென்னை சார்பதிவாளர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, விஷால் தரப்பில் தொடர்ந்த வழக்கில், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்த பதிவாளரின் உத்தரவுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கெனவே அறிவித்தபடி தேர்தலை ஜுன் 23-ம் தேதி நடத்தலாம். வாக்குகளை எண்ணக் கூடாது என இன்று உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாசர், நாங்கள் நீதியை மதிக்கின்றோம். திட்டமிட்டபடி நாளை மறுநாள் தேர்தலை நடத்துவோம் என்றார்.