பெர்லின்: ஜெர்மனியில் இன்றுடன் பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. அந்த நாளை ஜெர்மனி நாட்டு மக்கள், உற்சாகமாக கொண்டாடினர்.

உலக நாடுகள் அவ்வளவு மறக்க முடியாத, மறக்கப்படாத ஒரு நிகழ்வு தான் பெர்லின் சுவர். மக்கள் எழுச்சிக்கு முன்னால் எதுவும் பெரிதில்லை என்பதற்கு சான்றாக பார்க்கப்படுவது இந்த சுவர்.

2ம் ஆண்டு உலக யுத்தம் முடிவடைந்த சமயம். இந்த போருக்கு முன்பு, ஜெர்மனி என்பது ஒரே நாடு தான். ஹிட்லரின் படை போரில் தோற்க, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் ஜெர்மனியை துண்டாடின.

எல்லைகள் பிரிக்கப்பட்டன. தலைநகர் பெர்லினும் இரண்டானது. குறுகிய காலம் தான். ஒற்றுமையில்லாமல் போக, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ஆகிய நாடுகள் சோவியத் யூனியனை தனிமைப்படுத்தியது. விளைவு சோவியத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்கு ஆட்பட்டது கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி.

கிழக்கு ஜெர்மனி மக்களுக்கு, சோவியத் யூனியனின் ஆளுகை பிடிக்காமல் போக, 35 லட்சம் மக்கள் மேற்கு ஜெர்மனிக்கு படையெடுத்தனர். அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் தோல்வியை சந்தித்த சோவியத், இரு புறமும் மக்கள் செல்லாத வண்ணம் சுவர் ஒன்றை எழுப்பியது.

அதுதான் பெர்லின் சுவர். 1961ம் ஆண்டு ஆகஸ்ட் 13ல் 155 கிலோ மீட்டர் நீளத்தில் பெர்லின் சுவர் கட்டுவதற்கான பணி துவங்கப்பட்டது. முதலில் முள் வேலி என்று தொடங்கி, பின்னர் காங்கிரீட் சுவராக கட்டப்பட்டது. சுவரின் உயரம் 13 அடி.

பெர்லின் நகரத்தின் வழியே 27 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த சுவர் கட்டப்பட்டது. உறவுகள் பிரிந்தன.. கூக்குரல்கள் எழுந்தன. கண்ணீராக மாறியது கிழக்கும், மேற்கும்.

பெர்லின் சுவர் என்று சோவியத் ரஷ்யா அழைக்க, அது அவமானத்தின் சின்னம் என்றது மேற்கு ஜெர்மனி. காலச்சக்கரம் வேகமாக சுழல, 1989ம் ஆணடு நவம்பர் 9ம் தேதி அந்த மாற்றம் நிகழ்ந்தது.

மேற்கு ஜெர்மனிக்குள் நுழைய, கிழக்கு ஜெர்மனி மக்களுக்கு அனுமதி அளித்தது. லட்சக்கணக்கான மக்கள் சுவர் இருக்கும் பக்கம் திரள, அந்த அவமான சுவர் உடைத்து எறியப்பட்டது.

 

உறவுகளை பிரித்த அந்த சுவரை, இடிக்க பெரிய எந்திரங்களோ, பீரங்கி குண்டுகளோ பயன்படுத்தப்படவில்லை. மாறாக, உணர்ச்சிமிக்க மக்கள் தாங்களாகவே கொண்டு வந்த ஆயுதங்களால் உடைத்து எறியப்பட்டது அந்த சுவர்.

அதனை முன்னிட்டு, ஆண்டுதோறும் நவம்பர் 9ம் தேதி ஒற்றுமை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் பல நாடுகளின் தலைவர்கள் திரள்வர்.

ஒற்றுமை தின கொண்டாட்டங்களுக்கு காத்திருந்த மக்கள் மத்தியில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், அதற்காக கட்டப்பட்ட நினைவு சின்னத்துக்கு மலர்களை தூவினார். திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசினார்.

அவர் கூறியதாவது: சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் ஆகியவற்றை யாரும் தவறாக கையாளக்கூடாது. அதை நாம் பாதுகாக்க வேண்டும். எதிர்காலத்தில் ஐரோப்பாவானது இதற்காக போராடும். உலக மாற்றத்துக்கான நாள் இது என்று பேசினார்.