டில்லி:

திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு மாநில அளவிலான ஆலோசனை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு இன்து நடந்தது.

அப்போது இது தொடர்பாக 845 பக்கங்கள் அடங்கிய அபிடவிட்டை மத்திய அரசு சார்பில் வக்கீல் தாக்கல் செய்தார். இதில் முழுமையான தகவல்கள் இல்லாமல் அறையும் குறையுமாக இருந்தது. இதன் மீது நீதிபதிகள் சில சந்தேகங்களை எழுப்பினர். அதற்கு வக்கீலால் பதிலளிக்க முடியவில்லை. இதனால் நீதிபதிகள் ஆவேசமடைந்தனர்.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘உச்சநீதிமன்றம் குப்பை சேகரிப்போர் கிடையாது. மத்திய அரசு என்ன செய்ய முயற்சிக்கிறது. எங்களது கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறீர்களா?. நாங்கள் இதற்கெல்லாம் ஈர்க்கப்படமாட்டோம். எல்லாவற்றையும் இங்கே கொண்டு வந்து இருப்பு வைக்க நினைக்கிறீர்கள்.

இதை நாங்கள் ஏற்க மாட்டோம். இது போன்று செய்யாதீர்கள். உங்களிடம் உள்ள குப்பைகளை இங்கு கொண்டு எங்கள் முன்பு கொட்ட வேண்டாம். நாங்கள் குப்பை சேகரிப்போர் கிடையாது. இதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்’’ என்று தெரிவித்தனர்.