download
“ஏ.பி.ஆர்.ஓ. போஸ்டிங் விறுவிறுப்பாக நடந்தது தெரியும்தானே” கேட்டபடியே வந்தார் நியூஸ்பாண்ட்.
“தெரியும் தெரியும்…  தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளர், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. வளர்வதி,  தருமபுரி நகர்மன்றத் தலைவி, பரமக்குடி அதிமுக மாவட்ட அண்ணா தொழில்சங்கத்தின் பொருளாளர் நாகராஜன்  ஆகியோரின வாரிசுகள் ஏ.பி.ஆர்.ஓ.வாக பதவியேற்றிருக்கிறார்கள்..  இந்த விசயம் வெளியாகிவிட்டதே.” என்றோம்.
“அவசரப்படாதீர்.. வெளியாகாத விசயங்கள் நிறைய இருக்கின்றன.  பத்திரப்பதிவுத்துறையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரெக்ராட் கிளார்க் பணியிடங்களை நிரப்பும் வேலையும் அவசரகதியில் நடக்கிறது. அதே போல போக்குவரத்துத் துறையில் பல பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சுற்றுலாத்துறையிலும் அலுவல் பணிகள் பலவற்றை நிரப்பும் வேலை நடக்கிறது. இப்படி பல துறைகளிலும் ஆட்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.  ஆட்சிக்காலம் முடியும் நேரத்தில் இவை நடப்பதும், முறையான அறிவிப்பு இன்றி பணியிடங்கள் நிரப்பபடுவதும் அதிர்ச்சி என்றால், இதைவிட அதிர்ச்சி இன்னொன்று இருக்கிறது” என்று இடை நிறுத்தி நமது டென்சனை அதிகரித்தார் நியூஸ்பாண்ட்.
“அட.. சொல்லும்..” என்று நாம் அதட்டல் போட்டவுடன், “இந்த பணியிட நிரப்பல் வேலைகள் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களின் காதுக்கே போகாமல் நடக்கிறதாம்!” என்றார்.
“என்ன… என்ன சொல்கிறீர்?  அப்படியானால் அமைச்சர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?” என்றோம் அதிர்ச்சியுடன்.
“அவர்களுக்கும் இது கடைசி நேரம்தானே.. ஆகவே பெரிய பெரிய “பணிகளில்” கவனம் செலுத்தி வருகிறார்கள். தென் மாவட்டத்தில் அனுமதிக்காக காத்திருந்த ஒரு தொழில் நிறுவனத்துக்கு சில நாட்களுக்கு முன் அனுமதி கிடைத்திருக்கிறது. பலவித சட்ட நடைமுறைகளை மீறி இது நடந்திருக்கிறது என்று கிசுகிசுக்கிறார்கள். இதே போல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சிலவற்றுக்கும் அவர்கள் கேட்ட அனுமதிகள் சரசரவென கிடைத்திருக்கிறதாம்!” என்று நியூஸ்பாண்ட் சொல்ல.. “ம்… அடிக்கும்வரை அடித்துவிடவேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்கள் போலிருக்கிறது” என்றோம் நாம்.
அடுத்த செய்திக்கு தாவினார் நியூஸ்பாண்ட்:  “மாணவி ஒருவரின் எதிர்ப்பை மீறி ஜெ.வின் உருவம் பச்சை குத்தப்பட்டது அல்லவா.. “
“ஆமாம்.. மனித உரிமை கமிசனுக்கு அந்த விவகாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்கூட கூறினாரே..”
“ஆமாம்! அந்த விவகாரம் உண்மையாகவே மனித உரிமை கமிசனுக்குப் போகிறது. ஆனால் இதை பாமக கொண்டு செல்லவில்லை. மதுரையைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு ஒன்று இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது.!”
“ஓ… கமிசன் விசாரணை, கண்டனம், தண்டனை என்றெல்லாம் வந்தால் ஆளும் அதிமுகவுக்கு கெட்ட பெயர்தானே!”
“அதைவி இன்னொரு கெட்டபெயர் அரசுக்கு இப்போதே வந்துவிட்டது. தமிழகம் மின் மிகை மாநிலமாக இருக்கிறது என்றார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் தமிழகம் முழுதும் பரவலாக மின்வெட்டு ஆரம்பித்துவிட்டது”
“அதுதான் தெரிந்த விசயமாயிற்றே…”
“எதிலும் அவசரம்தான் உமக்கு. இந்த மின்வெட்டைப் போக்க “பெரிய அளவிலான” ஒப்பந்தம் அவசரகதியில் நடந்திருக்கிறதாம். இதுவும் ஆளும்தரப்புக்கு வில்லங்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்!”
“ம்.. போகிற நேரத்தில் உச்சபட்ச கெட்டப்பெயர் வாங்கித்தான் போவார்கள் போலிருக்கிறது!”

காமெடி போஸ்டர் சாம்ப்பிள்
காமெடி போஸ்டர் சாம்ப்பிள்

“ஓ.பி.எஸ்ஸூக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த பலரும் முயற்சி எடுத்து வருகிறார்கள். அதில் ஒன்று, அவரை தனிக்கட்சி ஆரம்பிக்கச் சொல்லி இணையதளங்களில் உலாவரும் ஒரு போஸ்டர் சாம்பிளும் ஒன்று..!”
“ஆமாம்.. நாமும் அதைப் பார்த்தோம். ஓ.பி.எஸ்ஸுக்கு சிக்கலை உண்டாக்கவே இது போல யாரோ செய்திருக்கிறார்கள் என்பது  அந்த போஸ்டர் மாடலை பார்த்தவுடனே தெரிந்துவிட்டதே..!”
“ஆமாம்.. இந்த போஸ்டர் ஓ.பி.எஸ்ஸின் பார்வைக்கும் போயிருக்கிறது!”
“பதறியிருப்பாரே மனிதர்..!”
“அதுதான் இல்லை..! உம்மாப்போலத்தான் சொன்னாராம். பார்த்தாலே தெரிகிறது எனது அரசில் எதிரிகள் வேலை என்பது. இதை யார் நம்பப்போகிறார்கள் என்று கேஷூவலாக சொல்லிவிட்டாராம்!”
“ஓ..”
கருணாநிதி - ஸ்டாலின்
கருணாநிதி – ஸ்டாலின்

“தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மிக நெருக்கமான சுப.வீரபாண்டியன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்தார் அல்லவா..  நீர்கூட இது கருணாநிதியின் குரல் என்பதாக செய்தி வெளியிட்டீரே…!”
“ஆமாம். மு.க. ஸ்டாலின்கூட இது சுப.வீயின் சொந்தக்கருத்து என்று சொல்லிவிட்டாரே..”
“ஆமாமாம்! ஆனால் கருணாநிதி இது குறித்து ஏதும் சொல்லாமல் மவுனம் சாதிப்பதில் உள்ளர்த்தம் இருப்பதாக சொல்கிறார்கள்!”
“ஓ… புரிகிறது, புரிகிறது..!”
“தி.மு.க. தரப்பு கடந்த சில நாட்களில் வெளியிட்ட தேர்தல் விளம்பரம் ஆளும் தரப்புக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  அடுத்தடுத்து எந்த மாதிரி விளம்பரங்கள் வர இருக்கின்றன என்று உளவுத்துறை மூலமாக தெரிந்துகொண்டார்களாம். அது இன்னமும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து நாளேடுகள் இரண்டின் அதிபர்களை மேலிடத்தில் இருந்து தொடர்புகொண்டு, நேரில் வரும்படி கூறியிருக்கிறார்கள்.
அந்த அதிபர்களில் ஒருவர் பவ்யமாக சென்று பார்த்துவிட்டு வந்துவிட்டார். செம டோஸ் என்கிறார்கள். இன்னொருவரோ, “நான் எதற்காக சந்திக்க வேண்டும். ஐ யம் பிஸி” என்று தகவல் அனுப்பிவிட்டாராம்!”
“அட… !”
விஜயகாந்த்
விஜயகாந்த்

“அடுத்த செய்தி…  விஜயகாந்த் தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று  தி.மு.க., மக்கள் நலக்கூட்டணி, பா.ஜ.க. மூன்றுமே தவம் கிடக்கின்றன. ஆளாளுக்கு அவரிடம் பேசுகிறார்கள். அவரும் யாருக்கும் பிடி கொடுக்காமல்.. வந்தவர்களுக்கெல்லாம் அல்வா கொடுத்து வருகிறார். இதனால் அவர் மீது இந்த கட்சிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றன. இந்த நிலையில் அவர்களை இன்னும் எரிச்சல் படுத்தும்படியான காரியம் ஒன்றை செய்யப்போகிறாராம் விஜயகாந்த்!”
“என்ன அது…?”
”வெளிநாட்டுக்கு பறக்கப்போகிறாராம்! உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெறவே செல்கிறாராம்!  அந்த நேரத்தில் நாட் ரீச்சபிளில் இருப்பார் என்பதால் கூட்டணிக்கு அலையும் கட்சிகளின் டென்சன் கூடும்!”
“ஒருவேளை, போன முறை மாதிரி அங்கேயே வைத்து டீலிங் ஏதும் நடக்கப்போகிறதோ…!”
நம்மை ஏறிட்டுப்பார்த்த நியூஸ்பாண்ட்.. “ம்.. வரவர நீரும் தேறிவிட்டீர்!” என்று புன்னகையுடன் முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டுக்  கிளம்பினார்.