நூறாண்டுகளுக்கு பிறகு ஒருசேர வந்திருக்கிறது ஆடி அம்மாவாசை, குரு பெயர்ச்சி, ஆடிப்பெருக்கு. தமிழர்களின் பாரம்பரியமான விசேசங்களான இந்த மூன்று நிகழவுகளும் ஒரே நாளில் வந்திருப்பது வரலாற்று சிறப்பு மிக்க அதிசயம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் விசேசமான நிகழ்ச்சி ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு மட்டுமே. இந்த வருடம்தான் குரு பெயர்ச்சியும் சேர்ந்து வந்துள்ளது. அதுவும் மூன்று முக்கிய நிகழ்வுகளும் ஒரு சேர, ஒரே நாளில் வந்திருப்பது விசேசமானது என ஆன்மிக பெரியவர்கள் கூறுகிறார்கள்.
1-adipuruk
ஆடிப்பெருக்கு
ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர்.
பொதுவாக இந்து சமய விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமை களையும் கொண்டே நடத்தப்படுகிறது.
ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.
ஆடி மாதம் விவசாயிகளுக்கு உகந்த மாதம். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால் தான் உருவானது.
மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் வழிபாடு செய்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவது வழக்கம்.
தமிழ்நாட்டில் காவிரிக்கரையோங்களில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.
தமிழகத்தின் காவிரி பாய்ந்தோடும்  ஒகனேக்கல் நீர்வீழ்ச்சி முதல் காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று சீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் புறப்பட்டு, அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்து எழுந்தருள்வார்.
அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.
பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது தண்ணீர் திறந்து விடப்பட்டு இவ்விழா நடைபெற்று வருகிறது.
ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் தாலி மாற்றி புதுத்தாலி கயிறு அணிவது அந்த பகுதி மக்களின் வழக்கம். திருமணம் ஆகாத பெண்கள் திருமணம் ஆக வேண்டும் என்று அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.
ஆடிப்பெருக்கின் போது பொங்கி வரும் காவிரி ஆற்றை பெண்கள் கங்காதேவியாக நினைத்து வணங்குவர். ஆறு பெருக்கெடுத்து ஓடுவதை போல் தங்கள் குடும்பமும் அனைத்து நலன்களும் பெற்று சுபிட்சமாக வாழ வேண்டி அவர்கள் திருமாங்கல்ய சரடை மாற்றிக் கொள்வார்கள்.
காவிரியை பெண்ணாகவும், சமுத்திர ராஜனை ஆணாகவும் கருதி, காவிரி பெண் தனது கணவரான சமுத்திரராஜனை அடைவதை காவிரி டெல்டா மக்கள் ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடி வருகிறார்கள். விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டி காவிரிக்கு மலர் தூவி வணங்குவார்கள்.
­
ஆடி அமாவாசை
adi amavasi
அமாவாசை தினம் மாதம்தோறும் வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஆடி மாதம் வரும் அமாவாசையின் சிறப்பு என்ன?
ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடன் ஒரே நேர் கோட்டில் அமையும் தினமே ஆடி அமாவாசை.
ஆடி அமாவாசையில் நம் முன்னோர்களை நினைத்து வணங்குதல் சிறப்பு. காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று தர்ப்பணம் செய்து விசேசமாகும்.
தட்சணாயன புண்ணிய காலத்தில் வருகிற முதல் அமாவாசையான ஆடி அமாவாசையன்று தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் (பிதுர்கடன்) கொடுத்தால் அது அவர்களை சென்று அடைகிறது என்பது ஐதீகம்.
ஆடி அமாவாசை அன்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ராமேசுவரம், வேதாரண்யம், திருவையாறு, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பவானி போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுப்பார்கள். சென்னை போன்ற இடங்களில் கோயில் குளங்களில், கடற்கரையில் தர்ப்பணம் கொடுப்பது உண்டு.
ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை படுக்கையில் இருந்து எழுந்து குளித்து விட்டு, சிவாலய தரிசனம் செய்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அன்னதானம் செய்ய வேண்டும்.
பிதுர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் மூதாதையர்களின் தோஷங்களில் இருந்து விடுதலை பெறலாம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசையன்று கடலில் தீர்த்தமாடுவது பாவத்தை போக்கி விமோசனம் அளிக்கும். அன்று ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் எள், மாவு, பிண்டம் ஆகியவற்றை மீன்களுக்கு கொடுத்தால் நீரில் சேர்க்கும் பொருள் ஆவியாக போய் பித்ருக்களை சென்று அடைவதாக ஐதீகம்.
குருப்பெயர்ச்சி
set3-44-yoga-dakshinamurthy
ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் நாள் குருப்பெயர்ச்சியாக கொண்டாடப்படுகிறது.
குருப்பெயர்ச்சி கோடி நன்மை தரும் என்று கூறப்படுகிறது.  குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
வியாழன் குரு பொன்னவன் ஆங்கீரசன் ஜீவன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் தனகாரகன் புத்திரகாரகன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் ஜீவன கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும்.
ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது.
சுப கிரகமான குருவிற்கு சில அசுப அமைப்புகளும் உண்டு. குரு பார்வை தான் யோகம், தோஷ நிவர்த்தி போன்ற ஏற்றமான பலன்களைத் தரும். ஆனால், தனித்த குரு எந்த இடத்தில் இருந்தாலும் அந்த உள்ள வீட்டின் ஸ்தானத்தை கெடுத்து விடும். அதை வைத்துத்தான் ‘குரு நின்ற இடம் பாழ்’ என்கின்றனர் ஜோதிடர்கள்.
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு. ஒன்று பணம் எனப்படும் பொருட்செல்வம், இன்னொன்று புத்திரயோகம் எனப்படும் குழந்தை செல்வம். இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. இந்த இரண்டிற்கும் காரகம் அதாவது, ஆதிக்கம் செலுத்தக்கூடிய கிரகம் குரு பகவான் ஆவார்.
அந்த வகையில் சுப கிரகம் என்று சொல்லக்கூடிய, சகல தோஷங்களையும் போக்கக்கூடிய, விசேஷ பார்வை பலம்பெற்றவர் குரு பகவான்.