ரத்பூர்,  ராஜஸ்தான்

ராஜஸ்தானில் ஒரு ஏடிஎம் மில் நூறு ரூபாய்க்கு பதில் ஐநூறு ரூபாய் நோட்டுகள் கிடைத்ததில் மக்கள் மகிழ்ந்தனர்.

ராஜஸ்தானில் பரத்பூரில் நை சடக் பகுதியில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி ஏ டி எம்மில் பணம் எடுக்கப் போனவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.  ரூ 100 நோட்டுக்கு பதில் ரூ. 500 வரும் போது மகிழ்ச்சி தானே.  உடனே இந்த செய்தி கடகடவெனப் பரவ மக்கள் வரிசையில் வந்து நின்று பணம் எடுத்துக் கொண்டு போனார்கள்.  சுமார் 250 பேர் வந்து ரூ 2 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்துக் கொண்டு சென்றனர்.

ஆக்ஸிஸ் வங்கி பணியாளர்களுக்கு செய்தி கிடைத்து அவர்கள் உடனடியாக அங்கு வந்து ஏ டி எம் மை மூடினார்கள்.  ஆனால் அதற்குள் பலர் பணம் எடுத்துச் சென்று விட்டனர்.  ஏ டி எம் மெஷினை ஆராய்ந்த போது உண்மை புலப்பட்டது.  இந்த ஏடிஎம் களில் பணத்தை வைக்க ஒரு நிறுவனத்துக்கு காண்டிராக்ட் விடப்பட்டிருந்தது.  அந்த நிறுவன ஊழியர்கள் ரூ 100 வைக்க வேண்டிய தட்டில் ரூ 500 ஐ வைத்து விட்டு சென்று விட்டனர்.

உடனடியாக யார் பணம் எடுத்தது என அக்கவுண்ட் நம்பர் மூலம் கண்டுபிடித்த வங்கி அதிகாரிகள் அந்த வாடிக்கையாளர்களிடம் அதிகமாக கிடைத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுக் கொண்டனர்.  ஆனல் அவர்கள் கொடுக்க மறுத்து விட்டனர்.

இதில் மற்றொரு குழப்பம் என்னவென்றால், வேறு வங்கி கார்ட் மூலம் பணம் எடுத்தவர்களின் முகவரியை தேடிக் கண்டுபிடிக்க ஆக்ஸிஸ் வங்கியினால் முடியவில்லை.  அதிகாரிகள் இப்போது உடனடியாக தங்களின் வாடிக்கையாளர்களிடமிருந்தாவது பணத்தை திரும்ப பெற முயன்று வருகிறார்கள்.