சிதம்பரம்

டராஜர் கோவிலுக்கு அர்ச்சனை செய்ய வந்த ஒரு பெண் பக்தையைக் கன்னத்தில் அடித்ததாகக் கூறப்பட்ட கோவில் தீட்சிதர் தலைமறைவாகி உள்ளார்.

சிதம்பரம் நகரில் உள்ள வ.உ.சி தெருவைச் சேர்ந்த செல்வ கணபதி என்பவரின் மனைவியான லதா ஆயங்குடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் தலைமைச் செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.   கடந்த சனிக்கிழமை இரவு லதா நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட்டு அர்ச்சனை செய்ய வந்தார்.  அவர் முக்குருணி விநாயகர் சன்னிதியில் தனது மகன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு தீட்சிதரான தர்சன் என்பவரைக் கேட்டுக் கொண்டார்.

தீட்சிதர் அர்ச்சனை செய்யாமல், வெறும் தேங்காயை மட்டும் உடைத்துக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் லதா ஏன் அர்ச்சனை செய்யவில்லை என்று கேட்ட போது அவரை தீட்சிதர் தகாத வார்த்தைகளால் ஏசியுள்ளதாகவும் ஆத்திரத்தில் லதாவின் கன்னத்தில் அறைந்ததால் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது அருகில் இருந்த சகபக்தர்கள் தீட்சிதரைத் தட்டிக் கேட்டுள்ளனர். அடிபட்ட லதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சிதம்பரம் நகரம் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

சிதம்பரம் கோவில் தீட்சிதர் தர்சன் மீது பொது இடத்தில் ஆபாசமாகப் பேசியது, மிரட்டல், பெண் வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது தீட்சிதர் தர்சன் தலைமறைவாகி விட்டதால் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.