டில்லி:

ட்டாசு விற்பனைக்கு, கடந்தாண்டு, டில்லியில்,  உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடையை மீண்டும் அமல்படுத்த கோரி அளிக்கப்பட்ட மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.

தலைநகர் டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள, தேசிய தலைநகர் பிராந்தியங்களில், தீபாவளி பண்டிகையின் போது,  காற்று, ஒலி மாசு படுவதாக புகார்கள் எழுந்தன. மாசுபடுதலை தடுக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் 2016 நவம்பரில் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவின்படி, தேசிய தலைநகர் பிராந்தியத்தில், பட்டாசு விற்பனைக்கு, கோர்ட் தடை விதித்தது.

சமீபத்தில், இந்த தடை தீபாவளி கொண்டாட்டங்களை முன்னிட்டு தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசு குறித்து ஆய்வு செய்து, ஆய்வறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய குழு அமைக்கப்பட்டது. சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில், பாதி எண்ணிக்கையிலான கடைகளுக்கு மட்டுமே, பட்டாசு விற்பனைக்கான உரிமம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில் பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு விதித்த தடையை, மீண்டும் அமல்படுத்தக் கோரி, நேற்று மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  உச்ச நீதி மன்ற நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, இன்று இம்மனுவை விசாரிக்க உள்ளது.