sbi
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘’இந்திய ஸ்டேட் வங்கியில் அசோசியேட்ஸ் (Associates) பணிக்கு மொத்தம் 17,140 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த 5 ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்ப நடைமுறைகள் அடுத்த மாதம் 10&ஆம் தேதி முடிவடைந்தவுடன் அடுத்த மாத இறுதியிலோ அல்லது ஜூன் மாதத்திலோ எழுத்துத் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் வங்கித் துறை வேலைவாய்ப்புகள் குறைந்து விட்ட நிலையில் ஒரேநேரத்தில் 17,140 பேருக்கு வேலை வழங்கும் முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால், இதற்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். கல்விக்கடன் வாங்கி அதை முறையாக திரும்பச் செலுத்தாதவர்கள் இந்த தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்பது தான் வங்கி நிர்வாகம் விதித்துள்ள நிபந்தனையாகும். இது ஏற்றுக்கொள்ளவே முடியாத நிபந்தனை என்பது ஒருபுறமிருக்க, இப்படி ஒரு நிபந்தனை விதித்ததன் மூலம் இளைய சமுதாயத்தின் வேலை பெறும் உரிமையை பறிக்க இந்திய ரிசர்வ் வங்கி முயல்கிறது. இது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரான செயலாகும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
கல்விக் கடன் என்பது படிக்கும் காலத்தில் வாங்கப்பட்டு, படிப்பை முடித்து பணிக்கு சென்றவுடன் செலுத்தப்பட வேண்டியதாகும். ஆனால், நல்வாய்ப்புக்கேடாக பொறியியல் உள்ளிட்ட பல படிப்புகளை படித்த லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாகி விட்டது. வேலை கிடைக்காததால் இளைஞர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில், கல்விக் கடனை திரும்பச் செலுத்தாத இளைஞர்களுக்கு வங்கிகளில் வேலை வழங்க முடியாது என்று வங்கி நிர்வாகங்கள் அறிவிப்பது படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடையே மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். கல்விக்கடன் தொடர்பாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் படித்து வேலைக்குச் சென்றவர்களில் 90 விழுக்காட்டினர் தவணை தவறாமல் கடனை செலுத்துவதாக தெரியவந்துள்ளது.
அதன்படி பார்த்தால் வேலை கிடைக்காதது தான் மாணவர்கள் கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததற்கு காரணம் என்பது தெளிவாகிறது. அவ்வாறு இருக்கும் போது படித்த இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது தான் அறிவார்ந்த செயலாக இருக்கும். வங்கிப் பணிக்கு எவரேனும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களின் ஊதியத்திலிருந்து கல்விக்கடனை வசூலிக்க ஏற்பாடு செய்யலாம். ஆனால், இந்த வாய்ப்புகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, கல்விக் கடனை செலுத்தத் தவறியவர்கள் வங்கிப் பணித் தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்று அறிவித்தால் அது இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை பாதிக்கும்; வங்கிகள் கொடுத்த கல்விக்கடனும் வசூலாக வாய்ப்பில்லை.
மாணவர்கள் வாங்கிய கல்விக் கடனுக்கான வட்டியில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தை மத்திய அரசு குறித்த காலத்தில் வழங்காவிட்டால் கூட, அது வங்கிக் கணக்கில் மாணவர்கள் கடன் தவணையை திரும்பச் செலுத்தவில்லை என்றே பதிவாகும். இவ்வாறு அரசு செய்த தவறுக்காக மாணவர்களை தண்டிப்பது சரியானதாக இருக்காது.
இந்த இடத்தில் வங்கிகளின் இரட்டை வேடத்தை சுட்டிக்காட்டத்தான் வேண்டியிருக்கிறது. இந்திய பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அளவு ரூ.4 லட்சம் கோடியை தாண்டி விட்டது. இதை வசூலிக்க வங்கிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பான வழக்கு அண்மையில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வாங்கிய கடனை திரும்பி செலுத்தத்தவறிய பெரிய நிறுவனங்களின் பெயர்களை வெளியிடும்படி நீதிபதிகள் வலியுறுத்தினர். ஆனால், அவ்வாறு வெளியிட்டால் செல்வாக்கு மிகுந்த தொழிலதிபர்களிடமிருந்து கடனை வசூலிக்க முடியாது என்று கூறி அவர்களின் பெயர்களை வெளியிட வங்கி நிர்வாகங்கள் மறுத்துவிட்டன. பணக்காரர்களிடம் இவ்வளவு பணிவு காட்டும் வங்கிகள் ஏழை மாணவர்களிடம் மட்டும் வீரத்தைக் காட்டுவது அழகல்ல.
எனவே, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு, கல்விக்கடன் செலுத்தாத மாணவர்கள் வங்கித் தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்ற நிபந்தனையை ரத்து செய்யும்படி வலியுறுத்த வேண்டும். தமிழகத்தில் அடுத்து பா.ம.க. அரசு அமைந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படுவதுடன், அவர்களின் வேலைவாய்ப்புகளுக்கும் உத்தரவாதம் அளிக்கப்படுவது உறுதி!’’என்று தெரிவித்துள்ளார்.