ஊடகவியலாளர் சரவணன் சந்திரனின் முகநூல் பதிவு: 
0

 
இந்த விஷயம் உண்மையா என்று தெரியவில்லை. நண்பர் ஒருத்தர் சொன்னது. நண்பரை நம்புகிறேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் நண்பர் ஒருத்தர் நவீனத் தேர்தல் பிரச்சாரப் பணியை முன்னெடுக்கும் அவரது நிறுவனம் வழியாக முன்னாள் அமைச்சர் ஒருத்தருக்கு பணிகள் செய்து தந்தார். பணியிறுதியில் அவருக்கு ஊதியமாகத் தரப்பட்ட தொகையை எடுத்துக் கொண்டு அறைக்குப் போயிருக்கிறார். அத்தனையும் நூறுரூபாய்க் கட்டுகள். அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கிடந்திருந்திருக்கின்றன. நோட்டுகளில் மணல்த் துகள்கள் ஓட்டி இருந்திருக்கின்றன. இரவு முழுவதும் அமர்ந்து ஒட்டிக் கிடந்த நோட்டுக்களைப் பிரித்து எடுத்திருக்கிறார்.

நண்பரிடம் நான் கேட்ட கேள்வியை அவர் அந்த அமைச்சரிடமும் கேட்டதாகச் சொன்னார். அதற்கு அவர், “எவண்ட்ட கொடுத்து வைக்கவும் பயமா இருக்கு. வாங்கிட்டு இல்லைங்கறான். தொழில்ல போட்டேன். நட்டம்ங்கிறான். பேங்க்லயும் ஆயிரத்தெட்டு கேள்விகள். எதுக்குச் சனியன கையில வச்சுக்கிட்டு அலையணும்னு பொதச்சு வச்சுட்டோம்” என்றாராம். எனக்குள் ஒரு விஷயம் யோசனையில் ஓடியது.
இந்தப் பணம் எங்கே போகிறது? ஊரில் தீப்பெட்டி ஆபிஸில் வேலை பார்க்கிற பக்கத்து வீட்டு அக்கா தன்னுடைய ரப்பர் பேண்டுகள் சுற்றப்பட்ட பழைய மொபைலை கடாசிவிட்டு புது மொபைல் வாங்கும் கனவில் இருக்கிறது. சிலர் நீண்ட நாட்களுக்கு அடுத்து மட்டன் கடைக்குப் போகும் திட்டத்தில் இருக்கிறார்கள். வேறு என்ன செய்வார்கள்? அணை போட்டால் தடுத்து விட முடியுமா?
ஏதோ இந்த நேரத்தில் சொல்லத் தோன்றியதால், சொல்லி விட்டேன். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. பணத்தின் தன்மை பரவுவதுதான். பூமிக்குள் புதைந்து கிடப்பதல்ல!