வீரலட்சுமி
வீரலட்சுமி

பீப் பாடல் பாடிய சிம்புவை ஆதரித்து, “தமிழர் முன்னேற்ற படை”  என்கிற அமைப்பின் நிறுவனர் வீரலட்சுமி என்பவர், சமீபத்தில்,  கருத்துக்களை வெளியிட்டார். இந்த நிலையில்தான், “சிம்புவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவரை ஆதரிக்கிறார் வீரலட்சுமி” என்று பகீர் புகார் கிளம்பியிருக்கிறது.

முதலில், சிம்புவை ஆதரித்து வீரலட்சுமி என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம்:

“நடிகர் சிம்புவை தமிழக காவல்துறை சிறையில் அடைத்தால் அவர் பிணையில் வெளியே வரும் பொழுது
சிறை வாசலிலேயே தமிழர்முன்னேற்றபடை வரவேற்புகொடுக்கும்

ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் விஷால் தாழ்த்தப்பட்ட மக்களை கொச்சை படுத்தி பேசிய போது பாயாத வன்கொடுமை தடுப்புச்சட்டம் ,

தமிழ் சினிமா துறையில் தனக்கென்று ஒரு நற்பெயரை தமிழர் அடையாளத்தோடு வைத்திருக்கும் அண்ணன் டி.ஆர்.ராஜேந்திரன் அவர்களின் மகனுக்கு மட்டும் ஏன் வன்கொடுமை தடுப்புச்சட்டம் வெறித்தனமாக பாய்கிறது.
அவர் தமிழன் என்பதாலா?

ஒரு வேளை தமிழக காவல் துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தால் அவர் பிணையில் வெளியே வரும் பொழுது தமிழர்முன்னேற்றபடை சார்பாக எமது தலைமையில் அவருக்கு சிறை வாசலிலேயே வரவேற்பு கொடுப்பேன்.

இன்று பெண்ணியத்திற்காக குரல் கொடுக்கும் மாதர் குல மாணிக்கங்களே பெண்கள் என்ற வரையரை இந்தியாவில் இருக்கும் பெண்களை மட்டும் தான் குறிக்குமா?ஈழத்தில் இல்லையா?

ஒரு வினாடியாவது கற்பை இழந்த பல்லாயிரம் பெண்களின் கதையை கேளுங்கள்.கற்பை காக்க உயிர் தியாகம் செய்த பல்லாயிரம் பெண்களின் கதைகளை படியுங்கள்.

பெண்களின் கண்ணியத்தை பாடல் வரிகள் மட்டும் பாதுகாக்க முடியாது!
– இதுதான் வீரலட்சுமியின் கருத்து.

 

வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன்
வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன்

 

தையடுத்துதான்   “வீரலட்சுமி சிம்புவிடம் பணம் வாங்கிக்கொண்டு ஆதரிக்கிறார்” என்கிற பகீர் புகாரை கிளம்பியிருக்கிறது. கிளப்பியிருப்பவர், வழக்கறிஞர் தமிழ்ராஜேந்திரன்,

இது குறித்து இவர் முகநூலிலும் எழுதியிருக்கிறார். அதிர்ச்சி அளிக்கும் அந்த பதிவு, இதுதான்:

“தமிழர் முன்னேற்ற படை என்ற பெயரில் இயங்கும் வீரலட்சுமி என்ற பெண் சிறு சிறு தமிழர் ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டதை கண்டு, முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு நான் வரச்சொல்லி, பழ.நெடுமாறன் ஐயாவிடம் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தி வைத்தேன்..

தொடர்ந்து நல்லெண்ணத்துடன் நட்பு பாராட்டிவந்தேன்.

இப்போது பீப் பாடல் விவகாரத்தில் ,ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக , சிம்புவை ஆதரித்து எனது குழுவில் அவர் பதிவு போட்டதைக் கண்டு, அதிர்ந்து போய், அவரை திருத்த இக்குழுவினருடன் சேர்ந்து அறிவுரை கூறிப் பார்த்தும் பயனில்லை என தெரியவந்தது…

சென்ற வாரம் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசிய எமி ஜாக்சனை எந்திரன் 2 படத்திலிருந்து நீக்க கோரி நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்து, அதற்காக இரண்டு பேருந்து வாடகைக்கு எடுக்க வேண்டும்.அதற்காக பத்தாயிரம் ரூபாய் வேண்டும் என என்னிடம் கேட்டு, வங்கி எண் அனுப்பினார்.
நான் யோசித்து அந்த செய்தியை பகிர்ந்தேன்.

இதற்கிடையே, அவர் இதே போல கோரிக்கை வைத்து தமிழர் நலம் பேரியக்க தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம் அவர்களிடம் 10,000 க்கு காசோலை பெற்று, அதை பயன்படுத்தி ஒரு பைக் வாங்கிவிட்டதாக தெரிந்துவிட்டது.
மேலும் எனது பல நண்பர்களிடம் இதே காரணத்தை சொல்லி பத்தாயிரம் , பத்தாயிரமாக கரந்திருப்பதாகவும் ஐயம் உள்ளது..மேலும் அவர் சொன்னபடி முற்றுகையும் நடத்தவில்லை. முற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துவிட்டார்.
இது போல சில போராட்டங்களை அறிவித்து, தமிழ் உணர்வாளர்களிடம் பணம் கரப்பதை வாடிக்கையாக கொண்டவர் இவர் என சந்தேகம் எழுகிறது.

சிம்பு வீட்டாரிடம் தொகை பெற்றுக்கொண்டு பீப் பாடலை ஆதரிக்கிறாரோ என கடும் ஐயம் எழுகிறது….!” என்று குறிப்பிட்டிருக்கிறார் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன்.

சமீபத்தில்தான், பேட்டி ஒன்றில் வீரலட்சுமி, “நானும் நிறைய தம்பிகளும் எங்களின் லட்சியத்தை வென்றெடுக்க, எங்க சொத்துக்களை வித்து அந்தப் பணத்தைக் கொண்டு வந்து கொட்டுறோம். என் அப்பா சொத்துக்களை அவர் அனுமதியோட நான் செலவழிக்கிறேன். இன்னும் உணர்வுப்பூர்வமா பலர் நன்கொடை கொடுக்கக் காத்திருக்காங்க. ஆனா, யாரிடமும் கைநீட்டி காசு வாங்கி கட்சி நடத்தும் எண்ணமும் இல்லை, அதற்கு அவசியமும் இல்லை!” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து வீரலட்சுமியை தொடர்புகொண்டோம். அவர், தற்போது தொலைக்காட்சி விவாதத்துக்காக வந்திருப்பதாகவும், பிறகு பேசுவதாகவும் கூறினார். அவரது கருத்தையும் கேட்டு வெளியிடுகிறோம்!

ஹூம்.. சிம்புல ஆரம்பிச்சு நடுவுல டர்ன் ஆகி இளையராஜாவுக்கு வந்து இப்போ பண புகாருக்கு வந்திருக்கிறது பீப் விவகாரம்… இது எங்கு போய் முடியுமோ?

  • சுந்தரம்