சென்னை

ட்சக்கணக்கில் பண மோசடி செய்தவர் எய்ட்ஸ் நோயாளி என்பதால் சென்னை உயர்நிதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கடந்த 1991 ஆம் வருடம் ஆரம்ப விவசாய கூட்டுறவு வங்கி ஒன்றில் பணி புரிந்த ஒரு நபர் லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. அவர் மீது நடந்த இரு வழக்குகளிலும் அவர் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது. அதை ஒட்டி கடந்த 2010 மற்றும் 2013 ஆகிய இரு வருடங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் அவருக்கு தலா ஒரு வருட சிறைதண்டனை வழங்கப்பட்டது.

அதன் பிறகு அவர் அளித்த மேல்முறையீட்டு மனுவில் அவர் தனக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதால் தனது வாழ்வு மிகவும் சிறியது எனவும் அதை சிறையில் கழிக்காமல் இருக்க தனது தண்டனையை ரத்துசெய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதை ஒட்டி மாவட்ட நீதிமன்றம் அவருடைய தண்டனையை தலா ஒரு மாத சிறை தண்டனையாக குறைத்து தீர்ப்பு வழங்கியது.

அந்த நபர் இந்த தீர்ப்பினால் திருப்தி அடையாமல் இந்த தண்டனையை முழுவதுமாக ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன், “ஏற்கனவே மாற்றி அமைக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை ரத்து செய்ய உத்தரவிடுகிறேன். அவருடைய நோயை மனதில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் இந்த உத்தரவை அளிக்கிறேன். அதே நேரத்தில் அவருக்கு ஒவ்வொரு வழக்கிலும் தலா ரூ.5000 அபராதம் செலுத்த வேண்டும் என தீர்ப்பளிக்கிறேன்” என தீர்ப்பு அளித்துள்ளார்.