download
 
பாலிமர் தொலைக்காட்சி பேட்டியின் போது வைகோ  வைகோ பாதியில் வெளியேறியது குறித்த விவாதம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.  இது குறித்து சிவகாசியைச் சேர்ந்த  பத்திரிகையாளர் கதிரவன் எழுதுகிறார்:
“வைகோ சாதாரணமான பத்திரிகையாளர்களை மதிக்கமாட்டார் என்பதற்கு அவரிடம் எனக்கு ஏற்பட்ட மோசமான ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
முன்னாள் சபாநாயகர் காளிமுத்து 2006ல் மறைந்த போது நான் ஜூவியில் ஏரியா ரிப்போர்டர். கலிங்கப்பட்டியில் உள்ள வைகோவை சந்தித்து காளிமுத்து சம்பந்தமான புகைபடங்கள் மற்றும் அவருடனான அனுபவங்களை பேட்டியாக எடுத்து அனுப்பச் சொல்லி அலுவலகத்தில் இருந்து அஸைண்ட்மெண்ட்.
அப்போது நல்ல மழைக்காலம். நான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள கலிங்கப்பட்டிக்கு என் நண்பரும், போட்டோகிராபருமான எல்.முருகனுடன்  டூவீலரில் நனைந்து கொண்டே சென்றேன்.  தனது வீட்டில்   வைகோ ரிலாக்ஸ்டாக இருந்தார் .
என்னை வரவேற்று காளிமுத்து சம்பந்தப்பட்ட போட்டோக்களை கொடுத்தார். அதை எங்கள் கேமராவில் நாங்கள் பதிவு செய்து கொண்டோம். இந்தப் பணிகள் சுமார்  ஒரு மணி நேரம் நடந்தது.
அதன் பின்னர், “அண்ணே…. உங்களை பேட்டி காணச் சொல்லி அலுவலகத்தில் உத்தரவு” என்று சொன்னது தான் தாமதம் ( நான் பத்திரிக்கையாளராக இருந்தாலும் சிறுவயது முதலே அவருக்கு  மிகநெருக்கமாக இருந்தவன். அந்த உரிமையில் தான் அண்ணே…என விளித்தேன்.] .மனிதர் சீறிவிட்டார்.
அப்போது எங்கள் அலுவலகத்தில் பணியாற்றிய சீனியர் ரிப்போர்டர் ஒருவர் பெயரைச் சொல்லி, “அவரிடம் போனில் பேட்டி கொடுத்துக் கொள்கிறேன்…. நீங்கள் போகலாம்” என்று தனது கடுமையான முகத்தைக் காட்டினார்.
எனக்கோ உள்ளுக்குள் கோபம் கலந்த எரிச்சல்.. அப்போ இந்த போட்டோக்களையும் அவரை வரவழைத்து வரிடமே கொடுத்து விட வேண்டியது தானே என  என் உள்மனது சொல்லியது.
நான் உள்ளுக்குள் பொங்கியதை வைகோ என் முகபாவத்தின் மூலம் அறிந்து கொண்டார். மறுநாள் காளிமுத்துவின் இறுதிச்சடங்கில் அதே போல மழையில் நனைந்த படியே அனைத்தையும் கவர் செய்து அனுப்பினேன்.
வைகோ அவர் சொன்ன நபரிடமே போனில் பேட்டி கொடுத்தார். அவரிடம் என்னை பற்றி என்ன சொன்னாரோ தெரியாது. அடுத்து வெளிவந்த ஜுவியில் நான் கஷ்ட்டப்பட்டு எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் வெளிவந்தன… என் பெயர் இல்லாமல்!
யாரிடம் வைகோ போனில் பேட்டி கொடுத்தாரோ….அது மட்டுமே அச்சரம் பிசாகாமல் வெளிவந்தது. இதன் பின்னர் என்ன நடந்தது என்பதை வைகோ மட்டுமே அறிவார். இந்த அளவுக்கு ஒரு உயர்ந்த அரசியல் வாதிதான் அவர்.
அதைப்போல ஏரியா ரிப்போர்டர் ஏதாவது கேட்டால் அந்த பத்திரிக்கையின் முதலாளிகள் பெயரைச் சொல்லி நான் அவரிடம் பேசிக்கொள்கிறேன் என்பார்.
2004 மக்களவை  தேர்தலின் போது நான் ராஜ் டி.வி செய்தியாளர். அப்போது சாத்தூரில்  ம.தி.மு.க. வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனின் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.  இது குறித்து நான் அந்த ஸ்பாட்டில் இருந்து நேரலையில் பேசினேன். நான் கொடுத்த செய்தி தவறானது என்று வைகோ ராஜ் டிவியின் உரிமையாளர் ராஜேந்திரனிடமே என்னைப் பற்றி புகார் சொன்னார்.
அலுவலத்தில் இருந்து வைகோ இப்படிச் சொல்கிறாரே என்று என்னிடம் விசாரித்தார்கள். நான் அவர்களிடம், ”அப்படியானால் வைகோவையே ரிப்போர்ட்டரா போட்டுக்கோங்க… அவர் தான் சரியான தகவலைக் கொடுப்பார்..” என்று கட் பண்ணிவிட்டேன். தனக்கு சாதகமான செய்திகள் மட்டுமே வரவேண்டும் என எதிர்பார்ப்பதில் அவருக்கு நிகர் அவரே…..
இலங்கையில் பிரபாகரனுக்கும், இரனில்விக்ரமசிங்கேவுக்கும் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நாள் அன்று ஒரு மருத்துவமுகாமில் கல்ந்துகொள்ள வைகோ வந்திருந்தார். அபோது அது குறித்து நான் அவரிடம் அவரது கருத்தைக் கேட்டேன்.
இதற்கு நான் பதில் சொன்னால் மருத்துவ முகாம் குறித்த செய்தி வராது. எனவே இதை உங்கள் பத்திரிக்கையின் தலைமை நிருபரிடம் பேசிக்கொள்கிறேன் என்று பத்திரிக்கையாளர்களை அவமானப்படுத்தியவர் தான் இந்த வைகோ.
அவர் சொல்லும் அந்த தலைமை நிருபர்களெல்லாம் மாணவப் பத்திரிக்கையாளர்களாகத் தான் தங்கள் பத்திரிகை பணியை துவக்கியவர்கள் என்பதை பாவம் வைகோ அறிந்திருக்கமாட்டார்..
ஏன்,  இவரே கலிங்கப்பட்டியில் இருந்து நேரடியாகவா தலைமை பதவிக்கு உயர்ந்தார்? முதலில் குருவிகுளம் யூனியன் சேர்மனில் துவங்கி, .தலைவர்களுக்கு ஜால்ரா அடித்து அடித்து மூத்த தலைவர்களை ஓரங்கட்டித் தானே உயர்ந்தார்?
ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கும் வைகோ போன்றவர்களிடம் அரசியல் நாகரீகத்தை எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு என்பதே என் கருத்து.”