Egypt President Sisi declares 3-month state of emergency

எகிப்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக மூன்று மாதங்களுக்கு நெருக்கடி நிலையை அறிவித்தார் அந்நாட்டு அதிபர் அபெல் ஃபாட்டா அல் சிசி.

எகிப்தின் தாந்தா, அலெக்சாண்டிரியா நகரங்களில் உள்ள இரண்டு தேவாலயங்களில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நேற்று வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இதில், 45 பேர் கொல்லப்பட்டனர். 120க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து, அதிபர் அல் சிசி, தேசிய பாதுகாப்புக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் சுருக்கமாக அவர் ஆற்றிய உரையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு எகிப்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாகவே நெருக்கடி நிலை அறிவிக்கப்படுவதாக தெரிவித்த சிசி, இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். நாடு முழுவதும் உள்ள அத்தியாவசியத் தேவைகளுக்கான சேவைகளில் பாதிப்பு ஏற்படாமல் ராணுவமும், காவல்துறையும் இணைந்து பணியாற்றும் என அவர் அப்போது தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான எகிப்த் அரசின் தற்போதைய நடவடிக்கைக்கு அமெரிக்கா உறுதியுடன் துணை நிற்கும் என கெய்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.