வாஷிங்டன்

பாகிஸ்தான் புலனாய்வு நிறுவனம் ஐ எஸ் ஐ பயங்கரவாத குழுக்களுடன் நேரடி தொடர்பு வைத்திருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசுத்துறை அதிகாரியான ஜோசஃப் டன்ஃபோர்ட் சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாத நிகழ்வுகள் பற்றி பேசி உள்ளார். அந்த சந்திப்பில் அவர் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டுகள் தெரிவித்துள்ளார்.

ஜோசஃப், “இந்தியாவும் ஆஃப்கானிஸ்தானும் ஏற்கனவே பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவுவதாக கூறி வருகின்றன.  அவர்கள் சொல்வது சரி என எனக்கு தோன்றுகிறது.  பாகிஸ்தான் புலனாய்வுத் துறையான ஐ எஸ் ஐ தனக்கென ஒரு வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்றுகிறது.

அதற்கும் அரசுக்கும் தொடர்பே இல்லாதது போல பயங்கரவாதக் குழுக்களுடன் நேரடி தொடர்பில் இருந்து வருகிறது. பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை கைவிடுவதாக சொல்லி வருகிறது.  ஆனால் ஐ எஸ் ஐ அதை கைவிடுவதாக தெரியவில்லை.” என கூறி உள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஐநா பொதுக்குழு கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பாகிஸ்தானில் பயங்கரவாதக் குழுக்கள் அதிகரித்ததற்கு அமெரிக்காவே காரணம் என கூறியதும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தான் பல பயங்கரவாதக் குழுக்களுக்கு அடைக்கலம் அளித்த்துள்ளதாக தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.