high-court-
மாமல்லபுரத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு பெருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்க சென்ற பாமக தொண்டர்களுக்கும், விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்துள்ள கழிக்குப்பம் பகுதியில் மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் பாமக தொண்டர் செல்வராஜ் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து மரக்காணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கழிக்குப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன், ரகு, செந்தில்குமார், பாரிநாதன், ராஜி, சேகர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை திண்டிவனத்தில் உள்ள மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பி.செல்வ முத்துக்குமாரி கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் 6 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ஐகோர்ட் இன்று தாற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், எஸ்.நாகமுத்து ஆகியோர் கொண்ட அமர்வு இந்த உத்தரவினை வழங்கியுள்ளது.