1453017293972
இன்று, மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வராக இருந்த ஜோதிபாசுவின் பிறந்தநாள் அல்லவா.. அவரைப் பற்றி, ஏற்கெனவே பழ. நெடுமாறன் அவர்கள் சொன்ன ஒரு ஆச்சரியமான சம்பவம் நினைவுக்கு வந்தது. அதை அவரது மொழியிலேயே மீண்டும் கேட்கலாமே என்று போன் செய்தேன்.
ரிங் ஆகிக்கொண்டே இருந்தது. சரி, ஏதோ வேலையாக இருப்பார் என்று செல்போனை அணைத்தேன். அடுத்த சில விநாடிகளில் அவரிடமிருந்தே போன். “வெளியில் போய்விட்டு வந்தேன். எடுப்பதற்குள் போன் நின்றுவிட்டது” என்றார். பிறகு கொஞ்ச நேரம் பொதுவாக பேசிவிட்டு, ஜோதிபாசு பற்றி கேட்டேன். பழ. நெடுமாறன் அந்த சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்:
“ஜோதிபாசு மேற்குவங்க முதல்வராக இருந்த சமயம். அப்போது மேற்கு வங்க மாநிலத்துக்கும், அதை ஒட்டிய பங்களாதேஷ் நாட்டுக்கும் இடையே பராக்கா என்ற அணைக்கட்டு தொடர்பாக பிரச்சினை இருந்தது.   பிரச்சினை அதிகமாகிக்கொண்டே வந்தது.
நன்கு யோசித்து ஒரு தீர்வை தயார் செய்தார், ஜோதிபாசு. நேராக பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்குச் சென்றார். அப்போது அங்கே ஷேக் ஹசீனா வாசித் பிரதமர். அவரிடம், அணைக்கட்டு பிரச்சினை குறித்து பேசினார். இருவருக்கும் ஒப்புக்கொள்ளும்படியாக ஒரு தீர்மானத்துக்கு வந்தார்கள்.
உடனே அங்கிருந்து இந்திய தலைநகரான டில்லி வந்தார். இங்கே அப்போது தேவகௌடா பிரதமர். அவரை சந்தித்த ஜோதிபாசு, “எங்கள் மாநிலத்துக்கும் பங்களாதேஷ் நாட்டுக்கும் இடையே நிலவிய பராக்கா அணைக்கட்டு பிரச்சினை தொடர்பாக நானும், அந்நாட்டு பிரதமரும் பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட்டோம். ஒப்பந்தமும் முடிவு செய்து விட்டோம். நான் மாநில முதல்வர் என்பதால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட முடியாது. பிரதமர் என்ற வகையில் நீங்கள்தான் கையெழுத்திட வேண்டும். ஆகவே நீங்களும், பங்களாதேஷ் பிரதமரும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள்” என்று உத்தரவு போல் கூறினார். அதன்படியே இந்திய பிரதமராக இருந்த தேவகௌடா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மேற்குவங்க மாநில பிரச்சினை தீர்ந்தது” என்று சொல்லி முடித்தார் பழ. நெடுமாறன்.
சற்று நேர அமைதிக்குப் பிறகு அவரே தொடர்ந்தார்:  “என் மாநில பிரச்சினைக்கு தீர்வு என்ன என்பதைக் குறித்து மாநில முதல்வராகிய நான் முடிவு செய்துவிட்டேன். பிரதமர் என்கிற முறையில் நீங்கள் கையெழுத்து போடுங்கள்” என்று உத்தரவு போல் சொல்லக்கூடிய தைரியம் ஜோதிபாசுவுக்கு இருந்தது. இதற்குக் காரணம், அவரது நேர்மை. அவரை எந்த விதத்திலும் மத்தியில் ஆள்வோர் அடிமைப்படுத்த முடியாத நேர்மை. ஆனால், ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள் முதல்வராக இருக்கும்போது இப்படி நெஞ்சுரத்துடன் மாநில நலனுக்காக மத்திய அரசை நிர்ப்பந்திக்க முடியாது. ஏனென்றால் x மத்தியில் ஆள்பவர்கள், பதிலுக்கு இவர்களைப்பற்றிய ஊழல் வழக்கு ஃபைல்களை எடுத்துப்போடுவார்கள். இவர்கள் பயந்துகொண்டு மாநில உரிமையை விட்டுக்கொடுத்துவிடுவார்கள். அதுதான் நடக்கிறது” என்று ஆதங்கத்துடன் சொன்னார் பழ. நெடுமாறன்.
நான் ஏக்கப்பெருமூச்சு ஒன்றைவிட்டேன்.
images (37)
 
 
மீண்டும் அவரே தொடர்ந்தார்: “எதிர்க்கட்சிகள் எல்லாம் இணைந்து ஜோதிபாசுவை பிரதமர் ஆக்க முயற்சி செய்தன. ஆனால் அவரது கட்சி தலைமை அந்த யோசனையை நிராகரித்து விட்டது. ஆகவே ஜோதிபாசு பிரதமர் ஆக முடியாமல் போய்விட்டது. அவர் பிரதமர் ஆகியிருந்தால், மிகவும் திறம்பட செயல்பட்டிருப்பார். நாட்டின் எதிர்காலம் குறித்த திட்டமிடலோடு இயங்கியிருப்பார். இன்று பாஜக ஆட்சிக்கு வந்திருக்கும் வாய்ப்பே கிடைத்திருக்காது!”
 
ராமண்ணா
மீண்டும் பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்தினேன்.
வேறென்ன செய்ய?