புதுடெல்லி:

இட ஒதுக்கீட்டுக்காக எண்ணற்ற இளைஞர்கள் இறந்திருக்கிறார்கள். கொடுத்ததே தாமதம், அதுவும் கொஞ்சமாக கொடுத்திருக்கிறார்கள். இட ஒதுக்கீடு என்ற பெயரில்  ‘லாலிபாப் மிட்டாய்’ கொடுத்து இந்து உயர் வகுப்பினரை மோடி அவமானப்படுத்தியுள்ளார் என அந்தர் ராஷ்ட்ரிய இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக மோடியை நோக்கி 6 கேள்விகளை எழுப்பி அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;
இந்தியாவில் உள்ள உயர் வகுப்பினருக்கு இப்படி கிள்ளிக் கொடுத்ததை வரவேற்க முடியாது. கொஞ்சமாக கொடுத்ததோடு, தாமதாகவும் கொடுத்துள்ளார் மோடி. பெயரில் உயர் வகுப்பினர் என்று இருந்தால் மட்டும் போதாது. வாழ்க்கையிலும் அவர்கள் உயரவேண்டும்.
குஜராத் முதலமைச்சராக 12 ஆண்டுகளும் இந்திய பிரதமராக 5 ஆண்டுகளும் பதவி வகித்த நரேந்திர மோடி அடுத்தவர்களைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை. அவரைப் பற்றி மட்டுமே கவலைப்படுவார்.
ராம், விவசாயிகள், வர்த்தகர்கள்,சிறு கடைக்காரர்கள்,மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குடும்பத் தலைவிகள், டாக்டர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் மோடி துரோகம் செய்துள்ளார்.
இப்போது 5 மாநிலங்களில் பாஜகவுக்கு தோல்வி. மக்களவைத் தேர்தல் வருவதால், உயர் வகுப்பினருக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.

பிரவீன் தொகாடியாவின் 6 கேள்விகள்

1.கொடூரமான கண் துடைப்பு: ஆட்சிக்கு வந்த ஆரம்ப காலத்திலேயே இந்த இட ஒதுக்கீடு மசோதவை ஏன் கொண்டு வரவில்லை. 40 மராட்டிய இளைஞர்களும், இந்தியா முழுவதும் 52 ஆயிரம் விவசாயிகளும் தற்கொலை செய்து கொள்ளும் வரை மோடிஜி ஏன் காத்திருந்தார்.

குஜராத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் படேல் சமுகத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டார்கள். மத்தியப் பிரதேத்தில் அப்போதை பாஜக அரசின் போலீஸின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு 6 விவசாயிகள் பலியானார்களே. இதில் எல்லாம் மோடிஜி அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. தேர்தலில் வெற்றி பெறுவதைப் போல் மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதிலும்,திட்டமிட்ட தொலைக்காட்சி விவாதங்கள் நடத்துவதிலும் அவர் கவனம் செலுத்துகிறார்.

2. முஸ்லிம்களை திருப்திப் படுத்தவா?: உயர்வகுப்பினர் பட்டியலில் உள்ள பத்தான், குரேஷி, போரா மற்றும் கிறிஸ்துவர்களுக்கும் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம் உண்டு என்கிறீர்கள், ஏன் பட்டேல், குர்ஜார், ராஜ்புத், மராத்தா, ஜாட் சமூகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதானே. அவர்கள் உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும் நன்றியுடையவர்களாக இருந்திருப்பார்களே?

3. வேலை மற்றும் கல்வியில் மோசடி: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்கெனவே தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த 5 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். சில்லறை வர்த்தகத்திலும் ஜிஎஸ்டி மற்றும் எப்டிஐ வரி விதிப்பு. காலியாக உள்ள 5 கோடி இடங்களை ஆண்டுகள் கடந்தும் இந்த அரசு நிரப்பியதா? இப்போது நீங்கள் ஒதுக்கிய 10 சதவீதத்தில் எத்தனை இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். இதில் இருந்து என்ன தெரிகிறது? கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் நலிவடைந்த பொது வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது நீங்கள் கொடுத்த பெரிய லாலிபாப். அதிக செலவு செய்தால் மட்டுமே தரமான கல்வி கிடைக்கிறது. இதில் இந்த குறைவான இடஒதுக்கீட்டில் ஏழை உயர் வகுப்பினர் எவ்வாறு அதிக கல்விக் கட்டணத்தை கட்ட முடியும்.

4. சமமற்ற புள்ளிவிவரங்கள்:  இந்துக்களுக்கு (உயர் வகுப்பினர் அல்லது மற்றவர்கள்) ஒரு மனைவிதான் இருக்க வேண்டும். 2 பிள்ளைகள்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் முஸ்லிம்கள் 4 திருமணங்கள் செய்து கொள்ளலாம். எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். இப்படியிருக்க, உயர்வகுப்பு ஏழைக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை முஸ்லிம்கள் ஏன் பெற வேண்டும். இது இந்து மதத்தைச் சேர்ந்த ஏழை உயர்வகுப்பினருக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா?

5.தேசத்தையே முட்டாளாக்குவதா?:  மோடி தன்னை ராஜாவாக நினைத்துக் கொண்டு, ஏழை உயர்வகுப்பினரை பிச்சைக்காரர்களாக நினைத்து, ஏறத்தாழ 62% மக்கள் தொகையில் வெறும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்துள்ளார். இது எவ்வளவு அபத்தம். ( ஏறத்தாழ 33% இந்து உயர் வகுப்பினர்+25% முஸ்லிம்கள்+ 3% கிறிஸ்தவர்கள்+1.3% ஜெயின்=62.3%). இவர்கள் எல்லோரையும் 10% இட ஒதுக்கீட்டுக்குள் அடைத்துள்ளனர்.
6. தேர்தல் சூதாட்டம்: தேர்தல் வரும் போது, பொருளாதார ரீதியில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தோம் என தேர்தல் சூதாட்டம் நடத்துவதற்காக இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளார்கள். சிலர் எதிர்க்கலாம். எதிர்ப்பவர்கள் வாக்களிக்காமல் போகலாம். எல்லாமே தேர்தலுக்காகத் தான். நன்மை செய்வதற்காக இல்லை. ராமர் கோயில் கட்டுவது, ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று சொன்னது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று சொன்னது…இப்படி எல்லா பொய்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த துரோகிகளுக்கு யாரும் வாக்களிக்கப் போவதில்லை. மாறாக தேர்தல் வந்தால் இவர்களுக்கு ‘லாலிபாப்தான்’ கொடுக்கப் போகிறார்கள்.
இவ்வாறு பிரவீன் தொகாடியா பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக 6 கேள்விக் கணைகளை தொடுத்துள்ளார்.