பாட்னா

னது 98ஆவது வயதில் பொருளாதாரப் பிரிவில் முதுகலை பயின்று ஒரு முதியவர் தேர்வு எழுதி உள்ளார்.

ராஜ்குமார் வைஸ்யா என்னும் முதியவர் உத்திர பிரதேச மாநிலம் பரேலியில் 1920ஆம் வருடம் பிறந்தவர்,  இவர் 1938ஆம் வருடம் தனது பட்டப்படிப்பை ஆக்ரா பல்கலைக்கழகத்தில் முடித்தார்.   பின்பு சட்டத்தில் 1940ஆம் வருடம் பட்டம் பெற்றார். ஜார்க்கண்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து 1980ஆம் வருடம் ஓய்வு பெற்றார்.

அவருக்கு வெகு நாட்களாக பொருளாதாரத்தில் ஆய்வு செய்து பி எச் டி பட்டம் பெற ஆசை இருந்தது. எனவே அவர் கடந்த 2015ஆம் ஆண்டு நாலந்த திறந்த வெளி பல்கலைக் கழகத்தில் பொருளாதார முதுகலைப் பிரிவில் சேர்ந்தார்.  அப்போது அவர் பெயர் லிம்கா உலக ரெகார்டுகள் புத்தகத்தில் வெளி வந்தது. சென்ற வருடம் முதலாண்டு தேர்வை எழுதியவர் இந்த வருடம் இறுதித் தேர்வை எழுதி உள்ளார்.

ராஜ்குமாருடன் தேர்வு எழுதிய மாணவர்கள் அவருடைய பேரக்குழந்தைகளை விட வயதில் சிறியவர்கள்.  தனது ஊக்கத்தை கைவிடாமல் ஆங்கிலத்தில் தேர்வு எழுதிய ராஜ்குமார் ஒவ்வொரு சப்ஜெக்டிலும் குறைந்த 25 பக்கம் எழுதி உள்ளார்.  விடியற்காலையில் எழுந்து படிப்பது மட்டுமே தமக்கு கஷ்டமாக இருந்ததாகவும் வேறொன்றும் அவர் கஷ்டப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் பி எச் டி பட்டம் பெறப்போவது பட்டத்துக்காக இல்லை எனவும் பொருளாதாரத்தை பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ளவே எனவும் கூறி உள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் அவருடைய கால் எலும்பு முறிந்ததால் வாக்கர் உபயோகித்து நடந்து வருகிறார்.  மனைவியை இழந்த இவர் தனது மகனுடன் தற்போது வசித்து வருகிறார்.  இந்தி, ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் சரளமாக பேசவும் எழுதவும் செய்கிறார்.