சென்னை:

தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கும் போது, 50 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு கட்டாயம் ஒதுக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள பரிசீலிக்குமாறு தமிழக சட்டசபையில்  வலியுறுத்தப்பட்டது.

கீழ்வேலூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன் சனிக்கிழமையன்று சட்டப்பேரவையில் பேசும்போது, தமிழகத்தில் தொழில் படிப்பு முடித்துவிட்டு ஏராளமானோர் வேலையின்றி தவிக்கின்றனர்.

புதிதாக தொழில் தொடங்குவோரிடம்,பணியிடங்களை நிரப்பும்போது 50 சதவீதம் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசும்போது, ஒப்பந்தத்தை மீறி வெளிமாநிலங்களில் இருந்தும் ஆட்களை பணியமர்த்தும் வாய்ப்பு உள்ளது. எனவே ஒப்பந்தத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செயல்படுத்துகிறார்களா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்த தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஜனவரி 23,24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடக்கிறது. தொழில் தொடங்கும் முன்பு போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே உள்ளூர் மக்களுக்கு பணியிடங்களில் 50 சதவீதத்தை ஒதுக்கும் ஷரத்தையும் சேர்க்க அழுத்தம் தரப்படும் என்றார்.