புதுவை துணைநிலை ஆளுநர் மாற்றம் குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரதமர் நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்தது. அதைத்தொடர்ந்து புதுவை மக்கள் சார்பில் அந்த விழாவில் நான் கலந்துகொண்டேன். நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். அவர் புதுவை மாநிலத்தில் திட்டங்களை நிறைவேற்ற உறுதுணையாக இருக்கவேண்டும். இதுதொடர்பாக அவரையும் மத்திய மந்திரிகளையும் சந்தித்து வலியுறுத்துவேன்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மதச்சார்பற்ற கட்சிகள் டெல்லி சென்று போராட்டம் நடத்தி உள்ளோம். அந்த கோரிக்கையையும் தொடர்ந்து வலியுறுத்துவோம். அதிக மானியம் வழங்குவது, கடன் தொகையை ரத்து செய்வது 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்காக நிதி வழங்குவது, மத்திய அரசின் திட்டங்களுக்கு 90 சதவீத நிதி வழங்குவதை தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மாற்றுவது தொடர்பாக மத்திய அரசு உரிய நேரத்தில் முடிவெடுக்கும். அப்படித்தான் நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.