பூரி

ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒரிசாவின் பூரி மற்றும் புவனேஸ்வர் நகரங்கள் மீண்டும் புது வாழ்வை தொடங்கி உள்ளன.

ஒரிசா மாநிலம் ஃபானி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.   தலைநகர் புவனேஸ்வர் மற்றும் புகழ்பெற்ற பூரி நகரம் இரண்டுமே கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.   இரு நகரங்களிலும்  மீட்பு பணிகள் தொடங்கி உள்ளன.    பூரி நகரம் ஒரு புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும்.   இங்கு சுற்றுலாத் துறை கடும் பாதிப்பு அடைந்துள்ளது.

புவனேஸ்வர் நகரில் 700 மாநகராட்சி தொழிலாளர்கள் புயலால் பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் இடிந்து விழுந்த வீடுகளின் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.   இந்த தொழிலாளர்களில் மேலும் பலர் கடற்கரை ஓரம் குடிசைகளில் வசித்து வந்தனர்.   புயலால் அவர்கள் இருப்பிடம் பாழானதால் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

இதனால் புவனேஸ்வர் நகரில் சுத்திகரிப்பு பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது.     பல இடங்களில் அங்குள்ள குடிமக்கள் ஆங்காங்கே விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றி வருகினறனர்.    அது மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் அப்பகுதி மக்களே மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூரியில் பல தங்கும் விடுதிகள் உள்ளன.   அந்த விடுதிகளில் உள்ள கண்ணாடிகள் அனைத்தும் பறந்து விழுந்து சுக்குநூறாகி உள்ளன.   பல இடங்களில் வெடி வைத்து தகர்த்ததை போல் கன்னாடி துண்டுகள் காணபடுகின்றன.    இங்கு பல தொண்டர்கள், உள்ளூர் வாசிகள் மற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பூரி நகரை சேர்ந்த தெரு வணிகர் ஒருவர், “இந்த புயல் கொடூரமானது.   இவ்வளவு மோசமாக இருக்கும் என எண்ணவில்லை.   இது கடவுள் ஜகன்னாதரின் இடம்.   அவர் ஆசியால் அனைத்தும் சரியாகி விடும்.  என்ன இழப்பு என்பதை யோசிக்காமல் புதியதாக அனைத்தையும் நாங்கள் தொடர வேண்டியது அவசியமாகி உள்ளது” என தெரிவித்துள்ளார்.