புலிகள் தமிழினி

புலிகள் மகளிர் பிரிவு முன்னாள் பொறுப்பாளர் தமிழினி மறைவு

கிளிநொச்சி:

புலிகள் தமிழினி

 

விடுதலைப்புலிகளின் மகளிர்  பிரிவு பொறுப்பாளர் தமிழினி இன்று அதிகாலை கிளிநொச்சியில் மறைந்தார். அவருக்கு வயது 43. ஈழத் தமிழரிடையே மிகுந்த புகழ் பெற்றிருந்த புலி தளபதிகளில் இவரும் ஒருவர்.

கிளிநொச்சி மாவட்டம் பரந்தனை சொந்த இடமாகக் கொண்ட தமிழினியின் இயற்பெயர் சிவசுப்பிரமணியம் சிவகாமி.

தனது 19 வயதில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். அவ்மைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக பணியாற்றினார்.

அரசு படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர் முடிவடைந்ததையடுத்து, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்தபோது இவர் கைது செய்யப்பட்டார்.

பெண்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கியதாகவும், வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புகளை வைத்திருந்ததாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. நீண்டகாலமாக வெலிக்கடைச் சிறைச்சாலையில் பெண்களுக்கான பிரிவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழினி, பின்னர் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு பயிற்சி நிலையத்தில் சேர்க்கப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையான இவர் அரசியலில் ஈடுபடுவார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இவரை தேர்தலில் போட்டியிடச் செயற்வதற்காக அரச தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாக அப்போது தகவல்கள் வெளியானது.

ஆனால், தான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று அவர் உறுதியாகத் தெரிவித்துவிட்டார். அதன்படி, திருமணம் முடித்து அமைதியான முறையில் வாழ்ந்து வந்தார்.

புற்றுநோய் பாதிப்பு அவருக்கு இருந்தது. அந்நோய் முற்றி மகரகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார்.

தமிழினியின் புகழுடலை அவரது சொந்த ஊரான பரந்தனுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் அவருடைய கணவரும் தாயாரும் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளை அல்லது மறுநாள் தமிழினியின் இறுதிக் காரியங்கள் பரந்தனில் நடைபெறும் என கூறப்படுகிறது.