பாருச்

புல்லட் ரெயில் திட்டத்தை எதிர்ப்போர் மாட்டு வண்டியில் பயணம் செய்யலாம் என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

குஜராத் தேர்தலை முன்னிட்டு பல அரசியல் தலைவர்கள் மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் குறிப்பிடத் தக்கவர்கள்.  காங்கிரஸ் தலைவர்கள் மோடியின் புல்லட் ரெயில் திட்டத்தை குறை கூறி வருகிறார்கள்.  குஜராத் மாநிலத்தில் கவனிக்க வேண்டிய பல விவகாரங்கள் உள்ளபோது இந்த திட்டம் தேவையற்ற ஒன்று எனக் கூரி வருகின்றனர்.

நேற்று குஜராத் மாநிலம் பாருச் பகுதியில் பா ஜ க ஒரு பேரணி ஒன்றை நிகழ்த்தியது.  அதில் உரையாற்றிய மோடி, “மும்பை – அகமதாபாத் நகரங்களுக்கிடையே ஆன புல்லட் ரெயில் திட்டத்தை எதிர்ப்பதை எதிர் கட்சிகள் ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர்.  அந்த திட்டத்தை எதிர்ப்போர் மாட்டு வண்டியில் பயணம் செய்யலாம்.  அதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.

இதற்கு முன்பு காங்கிரஸ் அரசு இதே போல ஒரு திட்டம் கொண்டு வர முயன்று தோல்வி அடைந்துள்ளது.  அந்த ஆத்திரத்தில் இந்த திட்டத்தை எதிர்க்கிறது.  பா ஜ க அரசு வேலைவாய்ப்பை அமைத்துத் தரவில்லை என பொய் பிரசாரம் செய்து வருகிறது. புல்லட் ரெயில் அமைக்க தேவையான சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்கள், ஊழியர்கள் ஆகியோர் இந்தியவை சேர்ந்தவர்கள் தானே?  இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்காதா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.