வாஷிங்டன்

புல்வானா தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநா செயலர் அண்டானியோ கட்டர்ஸ் கூறி உள்ளார்.

நேற்று பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது இயக்கத்தின் தற்கொலைபடையை சேர்ந்த அடில் அகமது வெடிமருந்து உள்ள ஒரு வாகனத்தை மோதி 44 சிஆர்பிஎஃப் வீரர்களை கொன்றுள்ளான்.     இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.   இதற்கு உலகெங்கும் கண்டனம் எழுப்பப் பட்டுள்ளது.

ஐநா சபையின் பொதுச் செயலர் அண்டோனியோ கட்டர்ஸ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளர்.   இது குறித்து அவருடைய செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், “காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வானா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்தோருக்கு எங்கள் அஞ்சலியையும் அவர்கள் குடும்பத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.    காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் பெற வேண்டும் என விரும்புகிறோம்.

இந்த தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.    இது போன்ற பயங்கரவாத செயலில் ஈடுபடும் இயக்கங்கள் பற்றிய பட்டியலை தயார் செய்து வருகிறோம்.   அந்த இயக்கங்களை விரைவில் தடை செய்ய உத்தேசித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.