கொல்கத்தா

க்களவை தேர்தலில் புல்வாமா தாக்குதலை வைத்து அரசியல் நடத்துவதாக மோடி மீது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பல கட்சிகளும் தங்கள் கட்சி தொண்டர்கள் கூட்டத்தை கூட்டி தேர்தல் குறித்து திட்டங்கள் தீட்டி வருகின்றன. திருணாமுல் காங்கிரஸ் தலைவியும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் தனது கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டினார். இதில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

அந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி, “தற்போது பாஜகவை மோடி மற்றும் அமித்ஷா என்னும் இரு சகோதர்கள் வழி நடத்தி வருகின்றனர். இருவர் கைகளிலும் இரத்தக் கறை படிந்துள்ளது. அவர்களுக்கு புல்வாமா தாக்குதல் குறித்து புலனாய்வுத் துறையின் முன்னெச்சரிக்கை அறிக்கைகள் கிடத்தும் அந்த தாக்குதலை தடுக்க மோடி எந்த முயற்சியும் செய்யவில்லை. இந்த தாக்குதலை வைத்து வரும் மக்களவை தேர்தலில் ஆதாயம் தேட அவர் நினைத்துளார்.

மோடி இந்த தாக்குதலை தடுக்க முயற்சி செய்யாத காரணம் இந்த தாக்குதலை வைத்து பிண அரசியல் செய்யலாம் என்னும் அவருடைய கொடூர குணமாகும். அரசு எடுக்கும் பல முக்கிய முடிவுகள் குறித்து அமைச்சர்களுக்கே தெரியாத அளவுக்கு மோடி கொடுங்கோல் ஆட்சி புரிந்து வருகிறார். அத்துடன் மக்களிடையே போர் அபாய உணர்வை தூண்டி தேர்தலில் வெற்றி பெற மோடி எண்ணி உள்ளார்.

வரும் மக்களவை தேர்தலில் நமது கட்சி தொண்டர்கள் கடும் கவனத்துடன் பணி ஆற்ற வேண்டும். பல இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஆளும் பாஜகவினர் முறைகேடுகள் நடக்க வாய்ப்புண்டு. அதை தடுக்க தொண்டர்களாகிய நீங்கள் போராட வேண்டும். நமது கட்சி மாநிலத்தில் 42 இடங்களிலும் வெற்றி வாய்ப்புடன் உள்ளது.” என உரையாற்றி உள்ளார்.