space
பெங்களூரு: புவி ஈர்ப்பு அலைகளை ஆய்வு செய்ய இந்தியர்கள் பல குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். லிகோ என்ற கதிரியக்க தலையீட்டுமாணி புவி ஈர்ப்பு அலை ஆய்வு மையத்தின் கீழ் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக புணே ஐயுசிஏஏ மற்றும் பெங்களூரு ஐசிடிஎஸ் ஆகிய மையங்ளில் கணினியில் பதிவிடும் உயர் ரக பணிகள மேற்கொள்ளப்படுகிறது. பால அய்யர் தலைமையில் பெங்களூரு ராமன் ஆராய்ச்சி மையமும், பிரான்ஸ் விஞ்ஞாணிகளும் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழு, விண்ணில் சுற்றி வரும் கருப்பு ஓட்டைகள் மற்றும் நியூட்டரான் நட்சத்திரங்களில் இருந்து புவி ஈர்ப்பு அலைகளின் சிக்னலை கணக்கீடு செய்வதில் முன்னோடியாக விளங்குகின்றனர்.
புணே ஐயுசிஏஏவில் சஞ்சீவி தூரந்தர் தலைமையிலான குழு, அடிப்படை தரவு பகுப்பாய்வு நுட்பங்கள் மூலம், கண்காணிப்பு கருவியில் மறைந்து கிடக்கும் புவி ஈர்ப்பு சிக்னல்களை ஒலி மூலம் கண்டறிந்து, கணக்கீடு செய்யும் பணியை மேற்கொள்கிறது.
புணே ஐயுசிஏஏ விண்வெளி மற்றும் விண் இயற்பியல் துறை இயக்குனர் சோமாக் ராய்சவுத்ரி கூறுகையில்,‘‘ இந்தியாவில் மேலும் சில ஆய்வு மையங்களை அமைக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவின் லூயிஸ்யானா மற்றும் வாஷிங்டன்னில் உள்ள இரு ஆய்வு மையங்களுக்கு எதிர் திசையில் மேலும் பல வசதிகளை ஏற்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
புவி ஈர்ப்பு அலையின் துல்லியமான பாதையை அறிய மேலும் பல திசைகளில் கண்காணிப்பபு கருவிகளை நிறுவ வேண்டிய அவசியம் உள்ளது.
அதனால் இந்தியாவில் ஆய்வு மையம் ஏற்படுத்தும் திட்டம் உள்ளது’’ என்றார்.
இந்திய ஆராய்ச்சி மையங்களின் தொழில் கூட்டமைப்புடன் இணைந்து லிகோ இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. லிகோ மற்றும் அதன் சர்வதேச பங்குதாரர்களின் ஆய்வுக் கூடம் அமெரிக்காவில் உள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
முழு வடிவமைப்பு மற்றும் பிரதான கண்காணிப்பு கருவியின் உப பொருட்களை லிகோ ஆய்வு கூடம் அளித்துவிட்டால், இந்தியாவில் சரியான இடத்தை தேர்வு செய்து கண்காணிப்பு கருவியை பொறுத்த அடிப்படை கட்டமைப்பை உருவாக்க வேண்டிய பொறுப்பு இந்திய விஞ்ஞாணிகள் கையில் தான் உள்ளது.