a

 

2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு  கட்சிகள் ஆயத்தமாகி வரும் நிலையில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை யாருக்கு அளிப்பது என்பதை விரைவில் முடிவு செய்ய இருக்கிறார் அக் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா.

சமீபத்தில் அமித்ஷா, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தற்போதைய தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், இல.கணேசன் ஆகியோரை டில்லிக்கு அழைத்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்திருக்கிறார். அது மட்டுமல்ல.. தமிழத்துக்கு புதிய தலைவராக யாரை நியமிப்பது என்பதில், இவர்களது மனவோட்டத்தையும் அறிந்துகொள்ள முயன்றிருக்கிறார்.

காரணம், வரும் ஜனவரி 15.. பொங்கலுக்குள் தமிழக பாஜவுக்கு புது தலைவரை நியமித்துவிட வேண்டும் என்பதில் பாஜக மேலிடம் தீர்மானமாக இருக்கிறது.

மாநிலங்களுக்கான பாஜக உட்கட்சித் தேர்தல் கட்சியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறது. ஆனால் மாநில தலைமைகயை மேலிடம்தான் தீர்மானிக்கிறது.

“ஹெச்.ராஜா, தொண்டர்களுக்கு உற்சாம் அளிக்கும்படி தீவிரமாக பேசக்கூடியவர். எதிர்க்கட்சிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பவர். தேர்தல் நேரத்தில் அவரை தலைவராக்குவதே கட்சிக்கு நல்லது” என்று அவரது ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள்.

ஆனால், “அவரது அதிரடி பேச்சுக்கள், கட்சிக்கு சிக்கலைத்தான் உண்டாக்குகிறது. அதுவும் தேர்தல் நேரத்தில் நீக்குபோக்காக இருக்க வேண்டும். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்த ம.தி.மு.கவை, அது விலகும் முன்பே கடுமையாக ராஜா பேசியது ஒரு உதாரணம். ஆகவே அவர் சரிப்பட மாட்டார்” என்பதே மற்ற தலைவர்களின் ஆதரவாளர்கள் கருத்தாக இருக்கிறது. இதையே மேலிடமும் நினைப்பதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வானதி சீனிவாசனைப் பொறுத்தவரை, சமீபத்தில் சில சர்ச்சைகளில் சிக்கினார். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களே அவரை அழைத்து நேரடியாக எச்சரித்ததாக செய்திகள் வந்தன. ஆகவே, தலைமைப்பட்டியில் அவர் பெயரே கிடையாது என்கிறார்கள்.

இல.கணேசனைப் பொறுத்தவரை, இந்த பதவியை எல்லாம் கடந்தவர். அவரது ஆதரவு தனிப்பட்ட யாருக்கும் இல்லை என்பதை தெரிவித்துவிட்டார். தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதுவே தனது கருத்து என்றும் சொல்லிவிட்டாரம்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவி மீண்டும் தமிழிசை சவுந்தராஜனுக்கே வழங்கப்படும் என்ற கருத்து தீவிரமாக அடிபடுகிறது.

காரணம் சர்ச்சைகளில் சிக்காதவர். கீழ்மட்ட தொண்டர்கள் வரை மதித்து பழகுகிறார். தமிழகம் முழுதும் சுற்றி வந்து தனது அயராத உழைப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எந்த ஒரு அரசியல் நிகழ்வு நடந்தாலும், உடனடியாக அதற்கு தகுந்த கருத்தை, எதிர்வினையை வெளிப்படுத்துகிறார் என்று ப்ளஸ் பாயிண்ட்டுகள் நிறைய. அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரான பொன். ராதாகிருஷ்ணனுடன்,  இணக்கமாக போக்கை கடைபிடிக்கிறார்.

இன்னொரு முக்கியமான விசயம், கடந்த 2014ம் வருட பாராளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்தது போல வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் அமைக்க விரும்புகிறார் அமித்ஷா. இதன் காரணமாகவே மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச்செயலாளர் எஸ்.மோகன் ராஜூலு ஆகியோர் விஜயகாந்தை தேமுதிக அலுவலகத்தில் சந்தித்து பேசினர் என்றும் பேச்சு அடிபடுகிறது.

இந்த சூழலில் தமிழிசை சவுந்திரராஜனே தலைமைப்பதவிக்கு பொறுத்தமாக இருப்பார் என்ற கருத்து மேலிடத்தில் நிலவுகிறது.

ஆனால், டில்லியில் இருந்து வரும் இன்னொரு செய்தி வேறுவிதமாக இருக்கிறது. அதுஇதுதான்:

“அமித்ஷாதான் தீர்மானிக்கும் சக்தி என்பது உண்மைதான். ஆனால் அவரது தீர்மானத்தை மாற்றும் சக்திகளும் கட்சிக்கு அப்பாற்பட்டு உண்டு. அந்த கட்சிக்கு அப்பாற்பட்ட சக்திகள், ஹெச்.ராஜாவுக்கு தமிழகத்தில் முக்கிய பொறுப்பு தரப்பட வேண்டும் என்று நினைக்கிறது. ஆகவே தமிழிசை மாற்றப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்கிறது.

ஆக, பாஜக வட்டாரத்தில் தமிழிசையே தொடர்வாரா, அல்லது மாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

வரும் பொங்கலுக்குள் பதில் கிடைக்கக்கூடும்!

  • டில்லியிலிருந்து எம். கார்த்திகேயன்