இப்போது வைக்கப்பட்டுள்ள பேனர்களில் ஒன்று
இப்போது வைக்கப்பட்டுள்ள பேனர்களில் ஒன்று

டந்த டிசம்பர் 31ம் தேதி, சென்னை திருவான்மியூரில் நடந்த அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு சென்னை முழுதும் அனுமதி இன்றி பல நூறு  பேனர்கள் வைக்கப்பட்டன. போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இந்த பேனர்களை பொதுமக்கள் முணுமுணுப்புடன் kடந்தனர்.
பேனர்களை உடைத்த தருணம்
பேனர்களை உடைத்த தருணம்

ஆனால் அறப்போர்  இயக்கத்தின் சந்திர மோகன் உட்பட மூவர், அந்த பேனர்களை கிழித்தெறிய முற்பட, அ.தி.மு.கவினரால் தாக்கப்பட்டனர். அதோடு அவர்கள் மூவர் மீதும் பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சிறையிலும் அடைக்கப்பட்டார்கள்.
தமிழகம் முழுதும் இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்போது, மீண்டும், அ.தி.மு.க. பேனர்கள் சென்னை உட்பட தமிழகம் எங்கும் முளைத்திருக்கின்றன. எல்லா பேனர்களிலும் முன்பு போலவே “அமமா” சிரிக்கிறார். நாளை, ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டுத்தான் இந்த பேனர்கள்.
இப்போது என்ன செய்யப்போகிறார்கள் அறப்போர் இயக்கத்தினர். அந்த இயக்கத்தின் சந்திர மோகனிடம் கேட்டோம்:
“முதல்ல நாங்க பேனர்களை உடைச்சதுக்கு காரணம் என்ன என்பதை சொல்லிடறேன். பேனர் கலாச்சாரம் என்பது அதிகார வர்க்கத்தின் ஆணவத்தின் வெளிப்பாடு. கோர்ட் பற்றி கவலை இல்லை மக்கள் உயிர் போனாலும் கவலை இல்லை நாங்க பேனர் வைப்போம் என்ற ஆணவம்.
சந்திரமோகன்
சந்திரமோகன்

இதை உடைக்கணும். இதை எதிர்ப்பதற்கு மக்களுக்கு இருக்கும் பயத்தை போக்கணும் என்பதுதான் எங்கள் நோக்கம்.
முதலில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து, காவல்துறையில் புகார் கொடுத்தோம். நடவடிக்கை ஏதுமில்லை என்பதால் நாங்களே களத்தில் இறங்கி பேனர்களை அகற்ற முற்பட்டோம்.
இதன் பிறகு கொஞ்சம் மாற்றங்கள் வந்தது. அமைச்சர்கள், அனுமதி வாங்கி பேனர் வைக்க ஆரம்பிச்சாங்க. ஆனா மறுபடி இப்போ ஆணவம் தலை தூக்கியிருக்கிறது. எந்த வித அனுமதியும் இல்லாமல், மக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் பெரிய பெரிய பேனர்களை வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காகவாம் இந்த பேனர்கள்.
மக்கள் இப்போதாவது விழிப்புணர்வு பெறணும். எங்களுக்கு போன் செய்து, “இங்கே அனுமதி இல்லாமல் வைத்திருக்கிறார்கள்.. வந்து உடையுங்கள்” என்கிறார்கள் சிலர்.
நாங்கள் சொல்வது இதுதான்.. உங்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டால், முதலில் சட்டப்படி காவல்துறையில் புகார் செய்யுங்கள். நடவடிக்கை இல்லை என்றால் நீங்களே உடையுங்கள்.
நாங்கள் மூன்று பேர் செய்ததை, மூவாயிரம் பேர் சேர்ந்து செய்தால் இன்னும் நல்ல விளைவுகள் ஏற்படுமே. அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் போய் புகார் கொடுங்கள்.
நாங்கள் மூவர் கைது செய்யப்பட்டபோது, சமூகவலைதளங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அநீதி கண்டு பொங்கினார்கள்.
அவர்கள் எல்லோரும் வெளியே வரவேண்டும் எங்களுடன் இணைந்து போராட வரவேண்டும். பத்திரிகை டாட் காம் இதழ் மூலம் அவர்களுக்கு அறப்போர் இயக்கம் அழைப்பு விடுக்கின்றது. இணைய போராளிகளே, அனுமதி இன்றி வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்ற வாருங்கள். இது அறப்போர் இயக்கத்தின் அறைகூவல் என்றார் சந்திரமோகன்.
மேலும், “நாங்களும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கலாம் என்பதை ஆலோசித்து வருகிறோம்” என்றும் கூறினார்.
– சுந்தா