cpr
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை கூட்டணிக்கு இழுக்க பா.ஜனதா பேரம் பேசியதாக வைகோ குற்றம் சாட்டி/யதற்கு  கண்டனம் தெரிவித்த  பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், “ வைகோவை போல சுய நலமிக்க தலைவர் தமிழகத்தில் யாரும் கிடையாது. தனது நலனுக்காக எந்த நிலைப்பாட்டையும் மாற்றிக் கொள்ளும் ஒரு தலைவர் தான் வைகோ” என்று குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் கூறியதாவது:
“விஜயகாந்தை பா.ஜனதா மயக்க பார்த்ததாக கூறும் வைகோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க. தலைவர் இல்ல திருமண விழாவுக்காக மு.க.ஸ்டாலின் அழைப்பிதழ் கொடுக்க வந்த போது என்ன சொன்னார்.
வைகோவிடம் அழைப்பிதழ் கொடுத்து விட்டு வந்த மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் கிடையாது என்றார். ஆனால் வைகோ அப்போது தி.மு.க.வுடன் மட்டும் தான் கூட்டணி என்றார். அதன் பிறகு 3 நாட்கள் கழித்து பல்லடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக தி.மு.க. எனது கட்சியை அழிக்கப் பார்க்கிறது என கூறினார்.
இந்த 3 நாட்களுக்குள் வைகோவின் நிலை மாறியது எப்படி? அவரது இந்த சிந்தனை  மாற்றத்துக்குக் காரணம் என்ன? என்பதை அவர் மக்களுக்கு விளக்க வேண்டும். அவர் யாரிடத்திலோ விலைபோய் விட்டதாலேயே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என நான் கூறுகிறேன்.
யாரிடத்திலோ பேரத்துக்கு அடிபணிந்து விட்டு இன்று பா.ஜனதாவை குற்றம் சாட்டுவதாக நினைத்து விஜயகாந்தை கொச்சைப்படுத்தி பேசுகிறார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்தை முன்னிலைப்படுத்துவதால் வைகோவுக்கு ஏற்பட்டுள்ள பொறாமையின் வெளிப்பாடு தான் அவரது இந்த பேச்சு.
தன்னை கொள்கை வீரர் என கூறும் வைகோ திருச்சியில் தி.மு.க. கூட்டத்தில் கட்அவுட் ஆக  நின்று விட்டு அதே நேரம் அ.தி.மு.க.வுடன் தொகுதிகள் பேசி முடித்தார். இது தான் கொள்கையா? வைகோ இதுவரை வாங்கிக் குவித்த சொத்துக்கள் எப்படி வந்தது? என விவாதிக்க தயாரா?
சொந்த கூட்டணி தலைவர் மீது பழி போடும் காழ்ப்புணர்வு மிக்க மனிதர்தான் வைகோ.  தன்னை தூய்மையான மகாத்மா காந்தி போல காட்டிக் கொள்ளும் வைகோ தனது கொள்கை நிலைப்பாட்டில் ஒரு போதும் உறுதியோடு இருந்தது கிடையாது.
யாருக்கும் விலை போக முடியாத உணர்வுள்ள விஜயகாந்த்தை சூழ்ச்சியால் வைகோ வீழ்த்தி விட்டார். விஜயகாந்த் கூட்டணியில் சேர்ந்ததால் வைகோ தான் பயன் அடைவார். விஜயகாந்துக்கு எந்த பலனும் கிடையாது.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய நடிகர் யார் என்று கேட்டால் சிவாஜி என குழந்தைக்கும் கூட தெரியும். ஆனால் அவரை விட வல்லமை படைத்த ஒரு நடிகர் என்றால் அது வைகோ தான்.
மக்கள் நலனில் அக்கறை இல்லாத கம்யூனிஸ்டுகள், சமூக மாற்றத்தை விரும்பாத வைகோ, இவர்களோடு எந்த கொள்கை முடிவும் எடுக்காமல் இணைந்துள்ள விஜயகாந்த் ஆகியோர் சேர்ந்துள்ள இந்த கூட்டணி மாற்றுக் கூட்டணியாக இருக்காது. தேர்தலுக்கு பிறகு மறைந்து போகும் கூட்டணியாகத் தான் இருக்கும். தேர்தலுக்குள் சிதறுண்டு போனாலும் ஆச்சரியம் இல்லை.
பா.ஜனதா தமிழகத்தின் வளர்ச்சியில் அக்கறையுடன் உள்ளது. பிரதமர் மோடி அரசின் 2 ஆண்டு கால சாதனைகள், தமிழகம் மிக வேகமாக முன்னேற பா.ஜனதாவின் திட்டங்கள் ஆகியவை பா.ஜனதாவுக்கு வெற்றியை தேடித்தரும்.
குஜராத்தை போல பூரண மதுவிலக்கை பா.ஜனதாவால் மட்டுமே கொண்டு வர முடியும். தமிழகத்தில் தாமரை மலரும். அதை தடுக்க எந்த அரசியல் கட்சிகளாலும் முடியாது”   இவ்வாறு சி.பி. ராதாகிருஷ்ணன்  கூறினார்.