public-may-invite-a-fine
மாநகரங்களில் பொது இடங்களில் குப்பை போட்டாலோ, சிறுநீர் கழித்தாலோ அபராதம் விதிக்கும் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் தண்டம் விதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பொது இடங்களில் குப்பைகளை வீசுவோர், சிறுநீர் கழிப்போர், திறந்தவெளியில் மழம் கழிப்போர் ஆகியோருக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. பொது இடங்களில் தூய்மையை பராமரிக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது.
நாடு முழுவதும் தூய்மையை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் தூய்மை பாரதம் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. ஆனால், அந்தத் திட்டம் தோல்வியடைந்து விட்ட நிலையில், மக்களைக் கட்டாயப்படுத்தி தூய்மைப்பாதைக்கு அழைத்துச் செல்லலாம் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்திருப்பதாகத் தோன்றுகிறது. அதுமட்டுமின்றி, தவறு செய்பவர்களுக்கு தண்டனை அதிகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொது இடங்களை அசுத்தப்படுத்துவோருக்கு குறைந்தபட்சம் ரூ.200 முதல் அதிகபட்சமாக ரூ.5000 வரை அபராதம் விதிக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளை அறிவுறுத்தியிருக்கிறது. மத்திய அரசின் இந்த நோக்கம் சரியானதாக இருந்தாலும், அந்த நோக்கத்தை அடைவதற்காக மத்திய அரசு கடைபிடிக்கும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
இது தொடர்பாக அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் அனைத்து மாநகரங்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். ஏப்ரல் மாதத்திற்குள் ஒவ்வொரு மாநகராட்சியிலும் ஏதேனும் ஒரு வட்டத்திலாவது அபராதம் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும்; இந்த ஆண்டு இறுதிக்குள் 10 முதல் 15 மாநகராட்சிகளில் அனைத்து வட்டங்களிலும், 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அனைத்து மாநகரங்களிலுள்ள அனைத்து வட்டங்களிலும் அபராதம், வசூலிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு கட்டளையிட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்நடவடிக்கை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இது மத்திய அரசு எதிர்பார்க்கும் பயனை ஒருபோதும் தராது.
மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதற்கு முன்பாக அவர்களுக்கான பாடங்களை நடத்தி முடிப்பது எவ்வளவு முக்கியமானதோ, அதேபோல், இத்தகைய நிபந்தனைகளை கொண்டு வருவதற்கு முன்பாக அவற்றை அனைவரும் கடைபிடிப்பதை உறுதி செய்யும் வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக சென்னையை எடுத்துக் கொள்வோம். சாலைகள் முழுவதுமே குப்பைகளாகவும், சாக்கடைகளாகவும் தான் காட்சியளிக்கின்றன. குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொட்டிக்குள் இருப்பதை விட 10 மடங்கு குப்பை தொட்டிக்கு வெளியில் கிடக்கின்றன. தூய்மையான சாலையில் மாநகராட்சி குப்பை வண்டி சென்றால் அந்த சாலை முழுவதும் அசுத்தமாகி விடுகிறது. குப்பை சிக்கலுக்கு நிரந்தர தீர்வு அறிவியல் பூர்வமான சுழியக் குப்பை (Zero Waste) திட்டத்தை செயல்படுத்துவது தான். இம்முறையில் தான் குப்பை உருவாகாமல் தடுப்பதும், அதையும் மீறி உருவாகும் குப்பைகளை வளமாக மாற்றுவதும் சாத்தியம். மேலும், இதில் தனிநபர்கள் மட்டுமின்றி, அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குத் தான் அதிக பொறுப்புகள் உண்டு. இவற்றையெல்லாம் செய்யாமல் பொது இடங்களில் குப்பை போடுவோரை தண்டிக்கப் போவதாக கூறுவதை ஏற்கமுடியாது.
அதேபோல், பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் விவகாரத்தை எடுத்துக் கொள்வோம். மும்பையில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.அவர்களுக்காக அங்கு மொத்தம் 70,000 பொது கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகராட்சியிலும் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலான மக்கள் தான் வாழ்கின்றனர். ஆனால், சென்னையில் 714 பொதுக் கழிப்பிடங்கள் மட்டுமே உள்ளன. மும்பையில் ஆயிரம் பேருக்கு 7 கழிப்பிடங்கள் இருந்தால் சென்னையில் ஒரு லட்சம் பேருக்குத் தான் 7 கழிப்பிடங்கள் உள்ளன. அவற்றிலும் பாதி கழிப்பிடங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சிதிலமடைந்தும், சமூகவிரோதிகளின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. பொதுமக்கள் பயன்படுத்த போதிய எண்ணிக்கையில் பொதுக்கழிப்பிடங்கள் இல்லாமல் பொது இடங்களில் சிறுநீர், மலம் கழிக்கக் கூடாது என்பது நியாயப்படுத்த முடியாத நிபந்தனையாகவே இருக்கும். இதற்காக அபராதம் வசூலிக்கத் தொடங்கினால் அது எதிர்மறையான விளைவுகளை மட்டும் தான் ஏற்படுத்தும்.
தூய்மை இந்தியா திட்டத்திற்காக அனைத்து சேவைகள் மீதும் மத்திய அரசு 0.5% கூடுதல் வரி வசூலிக்கிறது. இதன்மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.5000 கோடி வருமானம் கிடைக்கும். மத்திய, மாநில அரசுகளும் தங்கள் பங்குக்கு நிதியை ஒதுக்கி போதிய அளவில் கழிப்பிடங்களையும், குப்பைத் தொட்டிகளையும் அமைக்க வேண்டும். அதற்குப் பிறகு அபராதம் விதிக்கும் திட்டத்தைக் கொண்டு வருவது தான் சரியானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். எனவே, மாநகரங்களில் பொது இடங்களில் குப்பை போட்டாலோ, சிறுநீர் கழித்தாலோ அபராதம் விதிக்கும் திட்டத்தை திரும்பப் பெறும்படி மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆணையிட வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.