லக புகழ் பெற்ற கும்பகோணம் மகாமக விழா துவங்கி இன்றோடு மூன்றாவது நாள்.  வரும் 22ம் தேதி மகாமக நிறைவு விழா. அன்று உலகம் முழுவதிலும் இருந்து 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த அளவு  கூடும் பக்தர் கூட்டத்தை எதிர்கொள்ள  அரசு  எந்திரம் தயாராகி வருகிறதா? நிறைய ஏற்பாடுகள் செய்திருப்பதாக, செய்துகொண்டிருப்பதாக அரசு தரப்பில் செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.  அவை முழுமையாக நடைமுறைக்கு வந்திருக்கிறதா? இன்னமும் என்னென்ன வசதிகள் செய்யப்பட வேண்டும்?  என்பது குறித்து சொல்கிறார்  கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏவான க. அன்பழகன்.
தி.மு.கவைச் சேர்ந்த இவர் மீது, “கட்சி பேதமின்றி  அனைவருக்குமான எம்.எல்.ஏவாக  சிறப்பாக செயல்படுகிறார்” என்கிற அபிப்பிராயம் கும்பகோணம் தொகுதி மக்களிடம் இருக்கிறது. கரை வேட்டி கட்டியிருந்தாலும், காரில் தி.மு.க. கொடி பறந்தாலும், அவரது எம்.எல்.ஏ. அலுவலக போர்டில் எந்த கரையும் இல்லை.
“தி.மு.க. என்கிற முத்திரைதான் என்னை வெற்றிபெற வைத்தது. ஆனால் அது வேட்பாளராக இருக்கும் வரைதான். வென்றபிறகு, அனைத்து மக்களுக்குமான எம்.எல்.ஏ.தானே!” என்று சிரிக்கிறார் அன்பழகன்.
தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி நிதி 10 கோடி ரூபாயை, முழுவதுமாக, முறையாக செலவிட்ட எம்.எல்.ஏக்களில் இவரும் ஒருவர் என்பதே இதற்கு ஒரு உதாரணம்..  தொகுதி குறித்த அத்தனை விவரங்களையும் விரல் நுனையில் வைத்திருக்கிறார்.
இதோ…  க. அன்பழகன் பேசுகிறார்:
““மகாமக பெருவிழாவுக்காக தமிழக அரசு,  160 கோடி ரூபாய் செலவில் பல்வேறு பணிகளை செய்திருக்கிறது.  சில பணிகள் முடிவடையும் நிலைியல் இருக்கிறது.  அதற்காக எனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆனால் இன்னும் சில பணிகளை செய்ய வேண்டியிருக்கிறது..   இதை நான் கட்சிக்கண்ணோட்டத்துடனோ, அரசை குறை சொல்ல வேண்டும் என்றோ கூறவில்லை. தொகுதிக்காகவும், ஐம்பது லட்சம் பேர் கூடும் விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.
மகாமகத்தை எதிர்கொள்ள,  சரியான திட்டமிடல் வேண்டும். இதை மகாமகத்துக்கு முந்தைய ஓரிரு மாதங்களிலோ, அல்லது பதினைந்து நாட்களிலோ செய்துவிட முடியாது.
2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த  தற்போதைய அரசு, அப்போதிலிருந்தே திட்டமிட்டு செயல்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், மகாமகம் என்பது நிச்சயமாக 12 வருடங்களுக்கு ஒரு முறை நடப்பது என்பது அனைவருக்கும் தெரியும். கட்டாயமாக வரும் விழா இது. இதில் லட்சக்கணக்கானவர்கள் கூடுவார்கள் என்பதும் அனைவரும் அறிந்த செய்திதான்.
ஆகவே 2011ல் இருந்தே இதற்கான திட்டமிடல்கள் இருந்திருக்க வேண்டும்.
இதில் முக்கியமான ஒரு விசயத்தைச் சொல்லியாக வேண்டும். அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது மகாமகம் வந்திருக்கிறது.  எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அப்படி ஓர் வாய்ப்பு ஒரு முறை வந்திருக்கிறது. எங்கள் தலைவர் கலைஞருக்கு அப்படியோர் வாய்ப்பு வரவே இல்லை. ஆனால் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு இந்த வாய்ப்பு மூன்று முறை வந்திருக்கிறது. 1992, 2004 மற்றும் தற்போது 2016ல்! ஆகவே, இதற்காகவாவது, திட்டமிட்டு செயல்பட்டிருக்கலாமே என்கிற வருத்தம்தான் தொகுதி மக்களுக்கு!” என்ற, அன்பழகன், நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் பற்றி கூற ஆரம்பித்தார்:
“1968ம் ஆண்டு, அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது, கும்பகோணத்தில் பாதாள சாக்கடை, பல்வேறு சாலைகள்.. முக்கியமாக கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலைகள் போடப்பட்டன.
ஆனால் இப்போது, பெருகியிருக்கும் மக்கள் தொகைக்கு,  சாலை வசதிகள் இன்னமும் மேம்படுத்தியிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்பது வருத்தமே.
ஐம்பது லட்சம் மக்கள் வருகிறார்கள். அவர்களது போக்குவரத்துக்கு ஏற்பட சாலை வசதி இல்லை.
கும்பகோணத்தைச் சுற்றி, அமைந்துள்ள புறவழிச்சாலை பணி முற்றுப்பெற வில்லை.  தாராசுரம் டூ தாராசுரம் இந்த சாலை அமைக்கப்பட வேண்டும். ஆனால், தாராசுரம் டூ சாக்கோட்டை வரை மட்டுமே போடப்பட்டிருக்கிறது.
சாக்கோட்டையில் இருந்து மருதாநல்லூர் வழியாக தாராசுரம் வரையிலான சாலை பணி முடியவே இல்லை.
அதே போல இன்னொன்று.  விக்கிரவாண்டி டூ தஞ்சாவூர் சாலை, என். எச். 45 சி நெடுஞ்சாலையாகும்.  இதில் தஞ்சையில் இருந்து குடந்தை வழியாக மீன்சுருட்டி வரையிலான சாலையை இருவழி பாதையாக்க முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும்.  இதற்காக நிலத்தை அரசுடமையாக்க விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
கும்பகோணம் நகரப்பகுதிகளிலும் சாலைகளை அகலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், நடந்ததோ வேறு.
கோ.சி.மணி காலத்தில் அகலப்படுத்தப்பட்டன.  அப்போது, சாலைகளின் ஓரத்தில் அரசு இடத்தில் குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து இந்த பணி நடந்தது.
அப்படி அகலப்படுத்தப்பட்ட சாலைகளை தற்போது குறுக்கிவிட்டார்கள். உதாரணமாக  மீன் மார்க்கெட் சாலையில் இருந்து மணிக்கூண்டு,  பேருந்து நிலையத்தில் இருந்து உழவர் சந்தை வரும் சாலைகளை சொல்லலாம்.
கும்பகோணம் மன்னார்குடி வழியில் உள்ள திருமலைராஜன் ஆற்றுப்பாலம் பழுதடைந்துள்ளது. இதற்காக எத்தனையோ மனுக்கள் கொடுத்து, கோரிக்கை வைத்தும் நடக்கவில்லை.  அணைக்கரையில் கட்ட திட்டமிடப்பட்ட பாலப்பணிகள் விரைவுபடுத்தப்படவில்லை.

க. அன்பழகன்
க. அன்பழகன்

எதற்காக  சாலை வசதியின் அவசியம் குறித்து பேசுகிறேன் என்றால், மகாமகம் அன்று மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும். சாலை வசதி சரியாக இருந்தால்தான் நெருக்கடி குறையும்.
மகாமகத்துக்காக தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கிறது அரசு. இது வரவேற்கத் தக்க செயல்தான். ஆனால் புறவழிச்சாலையில் புதிய பேருந்து நிலையம் வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. மிக அவசியமான இந்த கோரிக்கை குறித்தும் சட்டசபையில் நான் பேசியிருக்கிறேன். ஆனால் அது இன்று வரை நடக்கவில்லை.
மின் வசதியை மேம்படுத்த வேண்டும் என்றும்  கோரிக்கை வைத்துக்கொண்டே இருக்கிறோம். மேலக்காவேரி, தாராசுரம் பகுதிகளஇல் புதிய துணை மின் நிலையங்களை அமைக்க வேண்டும்.  கொட்டையூரில் புதிதாக அமைக்கப்படும் துணை மின் நிலைய பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
இந்த துணை மின் நிலையத்துக்காக சட்டசபையில் நான் பேசியபோது, “இடத்தை தேர்வு செய்துகொண்டிருக்கிறோம்” என்றார் மாண்புமிகு மின்சார துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்கள். தற்போது 2016ல் நடந்த சட்டமன்ற கூட்டத்தின் போது இதையே நான் கேட்டபோது, “இடத்தை தேர்வு செய்துகொண்டிருக்கிறோம்” என்று பதில் அளித்தார் மாண்புமிகு அமைச்சர்.
நான்கு வருடங்களாக இடத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது. மகாமக காலத்தில் கூடுதலாக மின்சாரத்தை பயன்படுத்துவார்கள் மக்கள். அதற்கேற்ப, துணை மின் நிலையங்களை அமைத்திருக்க வேண்டும்.
நூற்றுக்கணக்கில் தற்காலிக கழிப்பறை கட்டப்பட்டிருப்பதாக அரசு அறிவிப்பு சொல்கிறது. ஆனால் பல லட்சம் மக்கள் கூடும் திருவிழாவுக்கு இது போதாது. மேலும் பல தற்காலிக கழிப்பறைகளை அமைக்க வேண்டும். அதே போல மருத்துவ முகாம்களும் போதுமானதாக இல்லை. இந்த விசயத்தில் தனியார் மருத்துவமனைகளையும் இணைத்து செயல்பட்டிருக்கலாம். கும்பகோணம் பகுதியில் சுமார் ஐம்பது தனியார் மருத்துமனைகள் இயங்குகின்றன. மகாமக பணியில் தங்களது பங்கும் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். ஆனால் அரசு, பயன்படுத்திக்கொள்ளவில்லை.  இப்போதாவது அவர்களுடன் அரசு கைகோர்க்க வேண்டும்.
அரசும் நீண்டகால திட்டத்துடன் மருத்துவ வசதியை மேம்படுத்தி இருக்க வேண்டும். ஏனென்றால் இதே மகாமத்தின் போதும், பிறகு பள்ளி தீ பிடித்த போதும் மக்கள் பட்ட அவதியை அனைவரும் அறிவோம்.
பள்ளி தீப்பிடித்து மாணவர்கள் கருகிய சம்பவத்தின் போது, அரசு மருத்துவமனையில் ஏ.சி. இல்லை. பிள்ளைகள் துடிக்கிறார்கள். பிறகு நாங்கள்தான் விரைந்து செயல்பட்டு ஏ.சி. பொறுத்தினோம். அதே போல 150 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட அரசு மருத்துவமனை, இடிந்து விழும் நிலையில் இருந்தது. அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று அரசு அறிவித்தது.
அதே இடத்தில் புதிதாக மருத்துவமனை கட்டிக்கொடுங்கள் என்று கேட்டபோது, தற்போது இயலாது என்று சொல்லிவிட்டது அரசு. பிறகு என் எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டது.
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சில உபகரணங்கள் இல்லை. போதி. மருத்துவர்கள் இல்லை. இதெல்லாம் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.  அவசர சூழலில் உதவும்.
போதுமான குடிநீர் தொட்டிகளும் வைக்கப்படவில்லை. அதே போல மகாமக குளக்கரையில் ஆடை மாற்றும் அறைகள் அவசியம். அங்கங்கே போலீஸ் செக் போஸ்ட் போல அமைத்திருக்கிறார்கள். ஆனால் கூடுகிற கூட்டத்துக்கு இது போதாது.
கும்பகோணத்தில் வசிப்பவர்கள் வீடுகளுக்கு இந்த சமயத்தில் நிறைய உறவினர்கள் வருவார்கள்.  ஆகவே கூடுதல் கேஸ் வழங்கப்பட வேண்டும். அதை உடனடியாகவும் வழங்க வேண்டும். அதே போல ஆவின் நிறுவனம் மூலம், கூடுதலாக பால் வழங்க வேண்டும்.
மிக முக்கியமான வேண்டுகோள்… மகாமகம் முடியும் வரை, கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும்.
நகர் முழுதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து பைனாகுலர் மூலம் கூட்டத்தை கண்காணிக்க வேண்டும். குடந்தையில் வசிக்க
பக்தர்களின் உடமைகளை வைப்பதற்கு பொருள் பாதுகாப்பு அறைகள் நிறைய வைக்க வேண்டும்” என்ற கும்பகோணம் எம்.எல்.ஏ. அன்பழகனிடம் இன்னும் பட்டியல் இருக்கிறது. அவற்றை குடந்தைக்கு வந்த தமிழக தலைமை செயலாளரிடம் கடந்த அக்டோபர் மாதமே அளித்திருக்கிறார்.
“ஆனால் அவற்றில் பலவும் பொருட்டாக எடுத்துக்கொள்ளப்படவில்லை” என்று வருத்தப்படும் அன்பழகன், “அரசு தன்னிச்சையாக மகாமக விழாவை நடத்திவிட முடியும் என நம்புகிறது. அதே நேரம்,  பொதுமக்கள், நிறுவனங்களையும் இணைத்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும்.
தொகுதி எம்.எல்.ஏ. என்கிற முறையில் என்னை இரு முறை இது தொடர்பான கூட்டங்களுக்கு  அழைத்தார்கள்.  அதன் பிறகு அழைப்பே இல்லை.
என்னை மட்டுமல்ல..  முன்பு எம்.எல்.ஏவாக இருந்தவர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் அனைவரையும் இந்த அரசு பயன்படுத்திக்கெள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.
மகாமக விழா தொடங்கி.. பெருவிழா நெருங்கிவிட்டது.. இனியாவது அரசு இதை செய்யுமா?”

  • கேட்கிறார் கும்போகோணம் தொகுதியின் மக்கள் பிரதிநிதி. அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.
  • சந்திப்பு: டி.வி.எஸ். சோமு