12 ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் மகாமகம் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் நடைபெறுகின்ற முக்கியமான விழாக்களில் ஒன்றாகும். லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் மகாமகக்குளத்தில் கூடும் அழகினைப் பார்க்கும்போது அவர்களுடைய பக்தியையும், நமது பண்பாட்டையும் உணரமுடியும்.
மாசிமகத்தோடு தொடர்புடைய 12 சைவக்கோயில்களும், ஐந்து வைணவக் கோயில்களும் மகாமகக்குளத்திலும் காவிரியாற்றிலும் தீர்த்தவாரி தருவது முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.  மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்கள் காசி விஸ்வநாதர் கோயில், கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், கோடீஸ்வரர் கோயில் (கொட்டையூர்), காளஹஸ்தீஸ்வரர் கோயில், கௌதமேஸ்வரர் கோயில், அமிர்தகலசநாதர் கோயில் (சாக்கோட்டை) மற்றும் பாணபுரீஸ்வரர் கோயில் அபிமுகேஸ்வரர் கோயில், கம்பட்ட விஸ்வநாதர் கோயில் மற்றும் ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஆகும். இவற்றில்10 கோயில்கள் கும்பகோணம் நகரிலும், இரண்டு கோயில்கள் சாக்கோட்டையிலும், கொட்டையூரிலும் அமைந்துள்ளன.
அதிக எண்ணிக்கையில் ஒரே நாளில் குளத்தில் இவ்வாறாக புனித நீராடல் என்பது மகாமகத்திற்கே உரித்தானதாகும். ஒவ்வொரு 12 ஆண்டும் நடைபெறும் இவ்விழாவினைக் காண்பதையும், கலந்துகொள்வதையும் பெரும்பேறாகப் பலர் கருதுகின்றனர். ஒவ்வொரு மகாமகத்தின்போதும் கும்பகோணம் புதுப்பொலிவு பெறுவதைக் காணமுடியும். மகாமகப்பணிகள் நடைபெற்று வரும் கும்பகோணம் நகருக்கு மக்கள் வர ஆரம்பித்துவிட்டனர். கும்பகோணம் நகரம் மகாமகத்திற்கு ஆயத்தமாகிவரும் இவ்வேளையில் மகாமகக்குளத்தினைச் சுற்றி நான்கு கரைகளிலும் அமைந்துள்ள 16 கோயில்களுக்குச் செல்வோம்.
மகாமகக்குளத்தைச் சுற்றி அமைந்துள்ள கோயில்களை சோடச மண்டபங்கள், சோடசக் கோயில்கள் என்று கூறுகின்றனர். சோடசம் என்பது 16ஐக் குறிக்கும். இந்நிலையில் இம்மண்டபங்களில் உள்ள மூலவரான லிங்கத்திருமேனியை சோடச லிங்கங்கங்கள் என்றழைக்கின்றனர். விஜயரகுநாத மன்னர் மனமுவந்து அளித்த 16 வகையான தானங்களின் வாயிலாக இந்த 16 மண்டபங்கள் கட்டப்பட்டது.
இந்த மண்டபங்கள் ஒவ்வொன்றும் பெரிய கோயில்களில் காணப்படுகின்ற சிறிய சன்னதியைப் போல உள்ளன. சிறிய கருவறையுடன் கூடிய விமானமும் அதற்கு முன்னால் ஒரு மண்டபமும் ஒவ்வொன்றிலும் காணப்படுகின்றன. கருவறையில் மூலவராக லிங்கத்திருமேனி காணப்படுகிறது. ஒவ்வொரு மூலவருக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது.
1
காசி விஸ்வநாதர்  கோயிலுக்கு எதிரேயுள்ள மண்டபம் முதல் மண்டபம் ஆகும். இது பிரம்மதீர்த்தேஸ்வரர் மண்டபம் எனப்படுகிறது. வட கரையில் இம்மண்டபத்தில் தொடங்கி ஐந்து மண்டபங்கள் உள்ளன. இரண்டாவதாக உள்ளது முகுந்தேஸ்வரர் மண்டபமாகும்.
2

முகுந்தேஸ்வரர் மண்டபம் (2), பிரம்மதீர்த்தேஸ்வரர் மண்டபம் (1)

3

(1) பிரம்மதீர்த்தேஸ்வரர் மண்டபம்

இரண்டாவது மண்டபமான முகுந்தேஸ்வரர் மண்டபம் அதிக சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. 16 மண்டபங்களில் கருங்கல்லில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகம் உள்ளவை இந்த மண்டபமேயாகும். தூண்களிலும் அழகான சிற்பங்கள் உள்ளன.
4

(2) முகுந்தேஸ்வரர் மண்டபம்

5
6
7
முகுந்தேஸ்வரர் மண்டபத்தை அடுத்து தானேஸ்வரர், இடபேஸ்வரர், பாணேஸ்வரர் மண்டபங்கள் உள்ளன.
8

(3) தானேஸ்வரர் மண்டபம்

9

(4) இடபேஸ்வரர் மண்டபம்

10

(5) பாணேஸ்வரர் மண்டபம்

ஆறாவது மண்டபமான கோணேஸ்வரர் மண்டபம் வடக்குக் கரையும், கிழக்குக்கரையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. கிழக்குக்கரையில் அடுத்தடுத்து பக்திகேஸ்வரர் மற்றும் பைரவேஸ்வரர் மண்டபங்கள் அமைந்துள்ளன. இக்கரையின் எதிரே அபிமுகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
11

(6) கோணேஸ்வரர் மண்டபம்

12

(7) பக்திகேஸ்வரர் மண்டபம்

13

(8) பைரவேஸ்வரர் மண்டபம்

ஒன்பதாவது மண்டபமான அகஸ்தீஸ்வரர் மண்டபம் கிழக்குக் கரையும் தெற்குக்கரையும் சந்திக்கும் சந்திப்பில் உள்ளது. அதையடுத்து, வியாகேஸ்வரர், உமாபாகேஸ்வரர், நிருதேஸ்வரர் மண்டபங்கள் அமைந்துள்ளன.
14

(9) அகஸ்தீஸ்வரர் மண்டபம்

15

(10) வியாகேஸ்வரர் மண்டபம்

16

(11) உமாபாகேஸ்வரர் மண்டபம்

17

(12) நிருதேஸ்வரர் மண்டபம்

13ஆது மண்டபமான பிரம்மேஸ்வரர் மண்டபம் தெற்குக் கரையும், மேற்குக்கரையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. தெற்குக்கரையில் அடுத்தடுத்து கங்காதேஸ்வரர், முக்தேஸ்வரர்,  ஷேத்திரபாலேஸ்வரர் மண்டபங்கள் அமைந்துள்ளன.
18

(13) பிரம்மேஸ்வரர் மண்டபம்

19

(14) கங்காதேஸ்வரர் மண்டபம்

20

(15) முக்தேஸ்வரர் மண்டபம்

21

(16) ஷேத்திரபாலேஸ்வரர் மண்டபம்

மகாமகக்குளத்தின் வட கரையில் தொடங்கி ஒரு சுற்று சுற்றி நிறைவு பெறும்போது 16 மண்டபங்களையும் அதிலுள்ள இறைவனையும் காணலாம். இவ்வாறு சுற்ற ஆரம்பிக்கும்போது தீர்த்தவாரி காணும் 12 சைவக்கோயில்களில் இரு கோயில்களான காசி விஸ்வநாதர் கோயிலையும், அபிமுகேஸ்வரர் கோயிலையும் காணலாம். பிப்ரவரி 2016இல் மகாமகம் நடைபெறவுள்ள இவ்வினிய வேளையில் கும்பகோணத்திற்குச் செல்வோம், பிற கோயில்களுடன் மகாமகக்குள சோடச மண்டபக்கோயில்களுக்கும் செல்வோம்.