gkra1
 
சென்னை:
மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய 6 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆர்.கே.நகரில் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. திருவாரூரில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடுகிறது. கொளத்தூரில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தே.மு.தி.க. போட்டியிடு கிறது. இந்த கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேலும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடலாம் என்று தெரிகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசனும் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் போட்டியிடும் தொகுதி இன்னும் முடிவாகவில்லை. இந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் மாநில செயலாளராக இருப்பவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற விதி உள்ளது. எனவே ஜி.ராமகிருஷ்ணன் தேர்தலில் போட்டியிடமாட்டார். மேலும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.